“எனது 3 நிமிட உரை நீக்கம்” - ராஜஸ்தான் முதல்வர் குற்றச்சாட்டும், பிரதமர் அலுவலக பதிலும்

பிரதமர் மோடி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் | கோப்புப்படம்
பிரதமர் மோடி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் | கோப்புப்படம்
Updated on
1 min read

ஜெய்பூர்: பிரதமரின் நிகழ்ச்சியில் இருந்து தனது மூன்று நிமிட பேச்சை பிரதமர் அலுவலகம் நீக்கி உள்ளதால், ராஜஸ்தான் வரும் அவரைத் தன்னால் ட்விட்டர் மூலமாக மட்டுமே வரவேற்க முடியும் என்று அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ட்விட்டர் எக்ஸில் வியாழக்கிழமை வெளியிடுள்ள பதிவில், "பிரதமர் நரேந்திர மோடி அவர்களே, இன்று நீங்கள் ராஜஸ்தான் வருகை தர இருக்கிறீர்கள். உங்களது அலுவலகம் எனது திட்டமிடப்பட்ட 3 நிமிட உரையை நிகழ்ச்சியில் இருந்து நீக்கியுள்ளது. அதனால், என்னால் தங்களை உரையின் மூலமாக வரவேற்க முடியாது. அதனால், இந்தப் பதிவின் மூலம் ராஜஸ்தான் வரும் உங்களை நான் மனதார வரவேற்கிறேன்" என்று கெலாட் இந்தியில் தெரிவித்துள்ளார்.

முதல்வரின் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள பிரதமர் அலுவலகம் சிறிது நேரத்தில் ட்விட்டர் மூலம் பதில் அளித்துள்ளது. அதில், "மரபுகளின்படி, நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நீங்களும் அழைக்கப்பட்டீர்கள். உங்களின் உரைக்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், உங்கள் அலுவலகம், உங்களால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளமுடியாது என்று தெரிவித்தது.

பிரதமரின் முந்தைய வருகைகளின்போது, நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் கலந்து கொண்டு நிகழ்வுகளை சிறப்பித்திருக்கிறீர்கள். இன்றைய நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உங்களை வரவேற்கிறோம். வளர்ச்சிப் பணிகளில் உங்களின் பெயரும் அதிகம் உள்ளது. சமீபத்தில் உங்களுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக உங்களுக்கு எந்தவித உடல் பிரச்சினைகளும் இல்லாதபட்சத்தில் உங்கள் வருகை மதிப்பு மிக்கதாய் இருக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க இருக்கும் ராஜஸ்தானுக்கு பிரதமர் 7-வது முறையாக வியாழக்கிழமை செல்ல இருக்கிறார். அங்கு நடக்கும் நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் அவர் கலந்துகொண்டு நலத்திட்டங்களை வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்பாக மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடந்த வன்கொடுமை குறித்து பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களையும் மணிப்பூருடன் ஒப்பிட்டு பேசியிருந்தார். பிரதமரின் இந்தப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த அசோக் கெலாட் பிரதமர் தனது பேச்சின் மூலம் ராஜஸ்தானின் சுயமரியாதையை மிகவும் புண்படுத்தி விட்டதாக குற்றம்சாட்டியிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது. இந்தப் பின்னணியில் இந்த ட்விட்டர் பதிவுகள் அதிக கவனம் பெறுகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in