Published : 27 Jul 2023 06:53 AM
Last Updated : 27 Jul 2023 06:53 AM
புதுடெல்லி: மத்திய அரசுக்கு எதிராக 2 நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ்கள் மக்களவையில் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கடந்த 2019-ல் பிரதமர் மோடி பேசிய ஒரு வீடியோவை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
அதில் பிரதமர் மோடி 4 ஆண்டுக்கு முன்பே கணித்துவிட்டார் என்ற கருத்துடன் பகிரப்பட்டுள்ள இது வேகமாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில் “ஓராண்டுக்கு முன்பு அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. இதற்காக எதிர்க்கட்சியினருக்கு வாழ்த்துகள். இதுபோல, வரும் 2023-ம் ஆண்டிலும் மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும் என நம்புகிறேன்” என கூறுகிறார்.
இதையடுத்து, இது ஆணவப் பேச்சு என எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் கூறினார். இதற்கு, “காங்கிரஸ் கட்சிதான் ஆணவப் போக்குடன் நடந்து கொண்டது. அதனால்தான் அக்கட்சியின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 400-லிருந்து 40 ஆகக் குறைந்துவிட்டது. சேவை மனப்பான்மை கொண்ட பாஜகவோ 2 இடத்திலிருந்து ஆட்சி செய்யும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது” என பிரதமர் கூறுகிறார்.
நாடாளுமன்றத்தில், கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி (2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு) குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, விவாதத்துக்கு பதில் அளித்து பிரதமர் மோடி பேசிய வீடியோதான் இப்போது பகிரப்படுகிறது.
கடந்த 2018-ம் ஆண்டு மத்திய அரசுக்கு எதிராக, சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தது. இதற்கு பல்வேறு கட்சிகள் ஆதரவளித்தன.
ஆனாலும், தீர்மானம் தோல்வி அடைந்தது. இதை குறிப்பிட்டுதான் பிரதமர் 2019-ல் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT