Published : 27 Jul 2023 07:02 AM
Last Updated : 27 Jul 2023 07:02 AM
திராஸ்: நாட்டின் மரியாதையையும், கண்ணியத்தையும் காப்பாற்ற ஜம்மு - காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை (எல்ஓசி) கடக்கத் தயாராக உள்ளோம் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
கார்கில் போரின் 24-வது வெற்றி தினம் நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. கார்கில் போரின்போது தங்களது உயிரை இழந்த தேசத்தின் மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றன. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் கார்கில் போரில் உயிரிழந்தவீரர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தி உள்ளனர்.
இந்நிலையில் லடாக்கின் திராஸ் பகுதியிலுள்ள கார்கில் போர் நினைவிடத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே, கடற்படை தலைமை தளபதி ஹரிகுமார் உள்ளிட்டோர் போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
அப்போது மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசியதாவது: கார்கில் போர் இந்தியாவின் மீது திணிக்கப்பட்டது. பாகிஸ்தானால் முதுகில் குத்தப்பட்டோம். நாட்டுக்காக தங்கள் உயிரை தியாகம் செய்த எங்கள் துணிச்சலான வீர மகன்களுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன். எப்போதெல்லாம் போர் சூழல் ஏற்பட்டாலும் பொது மக்கள் எப்போதும் படைகளுக்கு ஆதரவு வழங்கினாலும் அந்த ஆதரவு மறைமுகமாகவே இருந்துள்ளது.
தேவை ஏற்பட்டால் நேரடியாக போர்க்களத்தில் பாதுகாப்புப்படையினருக்கு ஆதரவளிக்க பொது மக்கள் தயாராக இருக்க வேண்டும்.
கார்கில் யுத்தத்தில் நாம் வெற்றி பெற்ற நிலையில் நமது ராணுவம் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டை தாண்டிச் செல்லவில்லை.
அமைதியை விரும்புகிறது: இந்தியா எப்போதும் அமைதியை விரும்புகிறது. இந்தியாஅமைதியை விரும்புவதால்தான் கார்கில் போரில் வென்ற போதும் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை நமது ராணுவம் தாண்டி செல்லவில்லை. நாம் சர்வதேச சட்டங்களை மதித்து அதன்படி நடந்து வருகிறோம்.
நாட்டின் கவுரவத்தையும், கண்ணியத்தையும் காக்க நாம் எந்த எல்லைக்கும் செல்லலாம். எல்லை கோட்டை கடப்பது அதில் அடங்கும் என்றால் அதை செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT