கியான்வாபி மசூதி சேதம் அடையாமல் எப்படி ஆய்வு நடக்கும்? - தொல்லியல் துறை விரிவாக விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
2 min read

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி மாவட்ட நீதிபதி ஏ.கே.விஸ்வேஷா கடந்த 21-ம் தேதி பிறப்பித்த உத்தரவில், ‘‘கியான்வாபி மசூதியில் இந்திய தொல்லியல் துறை அறிவியல்பூர்வமான கள ஆய்வு நடத்தி ஆகஸ்ட் 4-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.

இதன்படி இந்திய தொல்லியல் துறை நிபுணர்கள் கியான்வாபி மசூதியில் 24-ம் தேதி ஆய்வை தொடங்கினர். இதற்கிடையில், கியான்வாபி மசூதி நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு அன்றைய தினமே விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, 26-ம் தேதி (நேற்று) மாலை 5 மணி வரை கியான்வாபி மசூதியில் ஆய்வு நடத்த உத்தரவிட்டது. இதையடுத்து மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு உடனடியாக நிறுத்தப்பட்டது. இந்த வழக்கு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மசூதி நிர்வாகம் சார்பில் வழக்கறிஞர் கூறியதாவது:

காசி விஸ்வநாதர் கோயில் அருகில் கியான்வாபி மசூதி ஆயிரம் ஆண்டுகளாக உள்ளது. கோயிலை இடித்துவிட்டுதான் கியான்வாபி மசூதி கட்டப்பட்டது என்று கூறுவது ஒரு கட்டுக்கதை. கற்பனையாக கூறிவருவதன் அடிப்படையில் மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த கூடாது. மேலும், ஆயிரம் ஆண்டுகள் பழமையான மசூதியில் கள ஆய்வு நடத்தினால் மசூதிக்கு பாதிப்பு ஏற்படும். கட்டிடம் இடிந்து விழும் அச்சம் உள்ளது.

இவ்வாறு மசூதி நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடினார்.

இந்துக்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியதாவது: சர்ச்சைக்குரிய இடத்தில் கடந்த 1585-ம் ஆண்டு ராஜா தோடர்மால் என்பவரால் கோயில் கட்டப்பட்டது. அதன்பிறகு 1669-ம்ஆண்டு கோயிலை இடித்துவிட்டு கியான்வாபி மசூதி கட்டப்பட்டுள்ளது. எனவே, தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டும். அங்கு மசூதிக்குள் ஆய்வு நடத்தாமல், தொல்லியல் துறை ரேடார் மேப்பிங் தொழில்நுட்பத்தில் ஆய்வுசெய்ய வேண்டும். தேவைப்பட்டால் அகழாய்வு நடத்த வேண்டும். அதுவும் கடைசி கட்டமாகவே அகழ்வாய்வு நடத்தப்பட வேண்டும்.

இவ்வாறு இந்துக்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும் ஆய்வின் போது மசூதிக்கு எந்த சேதாரமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளப்படும் என்று இந்துக்கள் தரப்பினரும் தொல்லியல் துறையினரும் கூறினர். ஆனால், மசூதி நிர்வாகம் ‘‘இந்துக்கள், தொல்லியல் துறை அளிக்கும் உறுதிமொழியை நம்ப முடியாது’’ என்றனர்.

அதற்கு நீதிபதி கூறும்போது, ‘‘நீங்கள் யாரையும் நம்பவில்லை என்றால், இந்த நீதிமன்றம் அளிக்கும் உத்தரவை எப்படி நம்புவீர்கள்’’ என்று கேள்வி எழுப்பினார். அதேவேளையில் மசூதியில் ஆய்வு நடத்தும் வழிமுறைகள் குறித்து தொல்லியல் துறை தெரிவித்த தகவல்களில் நீதிபதி திருப்தி அடையவில்லை. இதையடுத்து, மசூதிக்கு சேதம் ஏற்படாமல் எப்படி ஆய்வு நடத்துவீர்கள் என்று விரிவாக விளக்கம் அளிக்க வேண்டும். நாளை மாலை வரை மசூதியில் ஆய்வு நடத்தக் கூடாது என்று நீதிபதி தடை விதித்தார். மேலும், வழக்கு விசாரணை இன்று தொடர்ந்து நடைபெற உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in