நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 20 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 20 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு
Updated on
1 min read

பெங்களூரு: கர்நாடகா மற்றும் கேரளாவில் கனமழை பெய்து வருவதால் கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதையடுத்து, காவிரியில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விட‌ப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்‍பிடிப்பு பகுதிகளான குடகு, மைசூரு, மண்டியா உள்ளிட்ட இடங்களில் கடந்த ஒரு வாரமாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இரவு பக‌லாக கொட்டித் தீர்க்கும் கனமழையால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தலக்காவிரி, பாகமண்டலா, மடிகேரி ஆகிய இடங்களில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 250 மிமீ அளவுக்கு மழை பதிவாகியுள்ளது.குடகில் தொடரும் கனமழை யால்காவிரி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், கிருஷ்ணராஜ சாகர், ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய‌ அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

காவிரியின் முக்கிய துணை ஆறான கபிலா உற்பத்தி ஆகும் கேரள மாநிலம் வயநாட்டிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் கபிலா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மைசூருவில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.கனமழையின் காரணமாக கடந்த 5 நாட்களில் அணையின் நீர்மட்டம் 15 அடி உயர்ந்துள்ளது. மழை காரணமாக தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

இதேபோல மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்ணாவில் 124 அடி உயரம் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 106.75 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 51 ஆயிரத்து 508 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 853 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. கனமழை தொடர்வதால் தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவும் னரும் நாட்களில் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in