

ஆந்திர மாநிலம், நகரி நகராட்சி மன்ற கூட்டத்தில் கலந்து கொண்ட எம்.எல்.ஏ ரோஜா, தெலுங்கு தேச கட்சியினரின் முற்றுகை போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரம் வெளியே வரமுடியாமல் தவித்தார்.
நகரி நகராட்சியை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது. இதனை தொடர்ந்து, புதன்கிழமை நடைபெற்ற நகராட்சிக் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் ரோஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தெலுங்கு தேச உறுப்பினர்கள் வருவதற்கு முன்னரே, அவைத் தலைவர் சாந்தி, அவை நிகழ்ச்சிக் குறிப்பைபடிக்க தொடங்கினார். இதற்கு, போதிய உறுப்பினர்களின் எண்ணிக்கை இல்லாததாலும், எம்.பி வராததாலும், கூட்டத்தை ஒத்தி வைக்குமாறு, ஆணையர் சாம்பசிவ ராவ், ரோஜாவிற்கு அறிவுறுத்தினார்.
இதற்கு ரோஜா உட்பட ஒய்.எஸ்.ஆர் கவுன்சிலர்கள் சம்மதிக்கவில்லை. இதனை தொடர்ந்து ஆணையர் சபையில் இருந்து வெளியே சென்று விட்டார். இந்த சமயத்தில் தெலுங்கு தேச நகராட்சி உறுப்பினர்கள் அவைக்குள் நுழைந்தனர். அவையை ஒத்தி வைக்கும்படி கூறியும், பெரும் கூச்சலிடையே, தலைவர் சாந்தி, நிகழ்ச்சிக் குறிப்பை தொடர்ந்து படித்து முடித்தார்.
இதனால், அவையில், அமளி ஏற்பட்டது. தெலுங்கு தேச உறுப் பினர்கள் நகரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். சுமார் ஒரு மணி நேரம் வரை நடந்த இந்த முற்றுகை போராட்டத்தால், அவைக்குள் இருந்த எம்.எல்.ஏ ரோஜா, நகர மன்ற தலைவர் சாந்தி உட்பட யாரும் வெளியே வர முடியாமல் தவித்தனர். பின்னர் தகவல் அறிந்த போலீஸார், சம்பவ இடத்திற்கு வந்து, ரோஜாவை மீட்டு அனுப்பி வைத்தனர்.