Published : 12 Nov 2017 10:21 AM
Last Updated : 12 Nov 2017 10:21 AM

வருமானத்துக்கு அதிகமாக சொத்து: உ.பி.யில் அரசு பொறியாளர் வீட்டில் வருமான வரி சோதனை - ரூ.50 கோடி சொத்துகள் கண்டுபிடிப்பு

உத்தரபிரதேசத்தில் அரசுப் பொறியாளர் ஒருவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.50 கோடி மதிப்புள்ள சொத்துகள் மற்றும் முதலீடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

உத்தரபிரதேச மாநில அரசில் நீர்ப்பாசனத் துறை பொறியாளராக இருப்பவர் ராஜேஷ்வர் சிங் யாதவ். இவரும் இவரது குடும்பத்தினரும் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளதாக வருமான வரித் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ராஜேஷ்வர் சிங் மற்றும் அவரது உறவினர்களை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் ராஜேஷ்வர் சிங், இவரது சகோதரர் மற்றும் மைத்துனருக்கு சொந்தமான இடங்களில் நேற்று வருமான வரித் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். டெல்லி, நொய்டா, காஜியாபாத், குருகிராம், எட்டா உள்ளிட்ட 7 நகரங்களில் இவர்களுக்குச் சொந்தமான மொத்தம் 22 இடங்களில் அதிகாரிகள் பல மணி நேரம் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது கணக்கில் வராத ரூ.50 கோடி மதிப்புள்ள சொத்துகள் மற்றும் முதலீடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் ராஜேஷ்வர் வீட்டில் இருந்து ரூ.2.5 கோடி மதிப்பிலான நகைகள் மற்றும் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன.

ராஜேஷ்வர் சிங் தனது சகோதரர் மற்றும் மைத்துனர் பெயரில் போலி நிறுவனங்களை ஏற்படுத்தி மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் வருமான வரித் துறை உயரதிகாரி ஒருவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x