Last Updated : 27 Nov, 2017 06:44 AM

 

Published : 27 Nov 2017 06:44 AM
Last Updated : 27 Nov 2017 06:44 AM

பொது சிவில் சட்டம் அமலாகும் வரை இந்துக்கள் கட்டாயம் 4 குழந்தை பெற வேண்டும்: ஹரித்வார் மடாதிபதி பேச்சால் சர்ச்சை

கர்நாடக மாநிலம், உடுப்பியில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில் ‘தர்ம சன்ஸாத்’ (இந்து மத) மாநாடு கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. பெஜாவர் மடாதிபதி விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமி தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டின் நிறைவு நாளான நேற்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலை வர் மோகன் பாகவத், விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் பிரவீண் தொகாடியா, கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா உட்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மடாதிபதிகள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதில் ஹரித்வார் பாரத் மாதா மந்திர் மடாதிபதி சுவாமி கோவிந்த தேவ் கிரிஜி பேசுகையில், ‘‘இந்தியாவில் இந்துக்களின் மக்கள் தொகை வேகமாக குறைந்து வருகிறது. இந்த போக்கு மிகவும் ஆபத்தானது. ஏனென்றால் முந்தைய காலத்தில் இந்துக்களின் மக்கள் தொகை குறைவாக உள்ள பகுதிகளில் நாம் எதிரிகளிடம் தோல்வி அடைந்திருக்கிறோம். இனியும் அந்த நிலை தொடர அனுமதிக்கக் கூடாது. மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை கொண்டுவர வேண்டும். ஒரே சிவில் சட்டம் முழுமையாக அமலாகும்வரை இந்துக்கள் அனைவரும் கட்டாயம் 4 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும். நாம் இருவர், நமக்கு இருவர் என்ற முழக்கத்தை இந்துக்கள் மீது மட்டும் திணிக்கக் கூடாது''என்றார். ஹரித்வார் மடாதிபதியின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மோகன் பாகவத் பேச்சு

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசுகையில், ''நாட்டில் அண்மைக் காலமாக பசு பாதுகாவலர்கள் (குண்டர்கள்) மிக சிறப்பான பணியை செய்து வருகிறார்கள். இந்துக்கள் அனைவரும் பசு பாதுகாவலர்களாக மாறி, பசுக்களைப் பாதுகாக்க வேண்டும். ஆனால் மதச்சார்பற்றவர்கள் என்ற போர்வையில் சிலர் இதை விமர்சிக்கிறார்கள். பசுவின் சிறுநீரில் பல்வேறு மருத்துவ குணாம்சங்கள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்துக்கள் அனைவரும் அதனை தெரிந்துகொள்ள வேண்டும். தற்போது இந்து மதம் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நம்முடைய எதிரிகளை வீழ்த்தி, வெற்றியை கைப்பற்றும் வரை இதில் பின்வாங்கக் கூடாது''என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x