

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் பலத்த மழை காரணமாக மலைக்குன்றுகளில் புதன்கிழமை அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது பாறைகள், கற்கள் அங்கிருந்த வீடுகள் மீது விழுந்ததில் 17 பேர் உயிரிழந்தனர். நிலச்சரிவில் 165 பேர் புதைந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மாவட்டத் தலைநகரான புனேவிலிருந்து 120 கி.மீ. தொலைவில் உள்ள மாலின் கிராமத்தில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. அங்குள்ள மலைக் குன்றுகளில் இருந்து சரிந்த பாறைகள், சகதியில் சிக்கிய 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
715 பேர் வசிக்கும் இந்த கிராமத்தில் புதன்கிழமை அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 44 வீடுகள் சேதம் அடைந்தன. பெரும்பாலானவர்கள் வீட்டில் உறக்கத்தில் இருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
தேசிய பேரிடர் மீட்புப்படையைச் சேர்ந்த 300 பேர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு உள்ளூர் அதிகாரிகள் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர் என மாவட்ட ஆட்சியர் சவுரவ் ராவ் கூறினார்.
நிலச்சரிவில் புதைந்துள்ள வர்களுக்கு பாதிப்பு நேரக்கூடாது என்பதால் மீட்புப்பணி மிக எச்சரிக்கையுடன் நிதானமாக செய்யப்படுகிறது. பிற பகுதிகளி லிருந்து 30 ஆம்புலன்ஸ்கள், 5 தீயணைப்புக் குழுவினர் நிலச்சரிவு நடந்த இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்
மாவட்ட நிர்வாகத்தினர் கொடுக்கும் தகவல்படி சுமார் 200 பேர் நிலச்சரிவில் சிக்கி இருப்பார்கள் என அஞ்சுவதாக தேசிய பேரிடர் மீட்புப்படை ஐஜி சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்தார்.
இதனிடையே, மீட்புப்பணிகளை பார்வையிட சம்பவம் நடந்த கிராமத் துக்கு மாநில முதல்வர் பிருதிவிராஜ் சவாண், துணை முதல்வர் அஜித் பவார் ஆகியோர் சென்றனர்.
மருத்துவக் குழுக்களும் கிராமத்துக்கு விரைந்துள்ளன. தயார்நிலையில் இருக்கும் படி பக்கத்தில் உள்ள மருத்துவமனைகள் உஷார்படுத்தப் பட்டுள்ளன. மகாராஷ்டிரத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில தினங்களாக இடைவிடாது பலத்த மழை பெய்து வருகிறது.
பிரதமர் இரங்கல்
நிலச்சரிவில் உயிரிழந்தவர் களின் குடும்பத்தாருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பாதிப்புக்குள் ளான மக்களுக்கு உரிய உதவி களை உடனடியாக மேற்கொள் ளும்படியும் சம்பந்தப்பட்ட அதிகாரி களுக்கு அவர் உத்தரவிட்டார் என பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
நிலைமையை நேரில் கண்டறி யும்படி உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கும் பிரதமர் உத்தரவிட்டுள்ளார். பிரதமர் உத்தரவை ஏற்று ராஜ்நாத் சிங் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்துக்கு விரைந்தார்.