

புதுடெல்லி: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஐஆர்சிடிசி ரயில் டிக்கெட் பதிவு செய்வதற்கான சேவை தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஐஆர்சிடிசி ட்வீட் செய்துள்ளது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஐஆர்சிடிசி வலைதளம் மற்றும் செயலியில் டிக்கெட் சேவையை பயனர்களால் பெறமுடியவில்லை. இந்த சிக்கலுக்கு தீர்வு காணும் நோக்கில் தொழில்நுட்பக் குழு பணியாற்றி வருகிறது. பயனர்கள் அமேசான், மேக் மை ட்ரிப் போன்ற மாற்று தளங்கள் மூலமாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.
வலைதளங்கள் முடக்கம் குறித்த தகவலை நிகழ் நேரத்தில் கண்டறிய உதவும் டவுன் டிட்டக்டர் தளமும் இதை உறுதி செய்துள்ளது. பயனர்கள் தங்களால் வலைதளம் மற்றும் செயலியை பயன்படுத்த முடியவில்லை என்றும், டிக்கெட் பதிவு செய்ய முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். காலை 10 மணி நிலவரப்படி நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இதில் புகார் தெரிவித்துள்ளனர்.