மணிப்பூரில் பெண்களை ஆடையின்றி இழுத்து சென்ற மேலும் 14 பேரை வீடியோ மூலம் அடையாளம் கண்டது போலீஸ்

மணிப்பூரில் பெண்களை ஆடையின்றி இழுத்து சென்ற மேலும் 14 பேரை வீடியோ மூலம் அடையாளம் கண்டது போலீஸ்
Updated on
1 min read

இம்பால்: மணிப்பூரில் 2 பெண்களை ஆடையின்றி இழுத்துச் சென்ற கும்பலில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். அந்த சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் 14 பேர் வீடியோ மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூகத்தை சேர்ந்தவர்கள் சுமார் 53 சதவீதம் பேர் உள்ளனர். நாகாமற்றும் குகி இனத்தை சேர்ந்தவர்கள் 40 சதவீதம் பேர் உள்ளனர். இவர்களில் குகி இனத்தவர்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கிடைத்துள்ளது.

அதேபோன்று தங்களுக்கும் பழங்குடியின அந்தஸ்து வேண்டும் என்று மைதேயி சமூகத்தினர் போராடி வருகின்றனர். மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடியின அந்தஸ்து அளிக்கக் கூடாது என்று குகி இனத்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் 2 சமூகத்தினர் இடையே கடந்த மே மாதம் 3-ம் தேதி மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. அது மணிப்பூர் மாநிலம் முழுவதும் கலவரமாக மாறியது. அப்போது பழங்குடியினத்தைச் சேர்ந்த 2 பெண்களை ஆடையின்றி ஊர்வலமாக சிலர் இழுத்துச் சென்று மானபங்கம் செய்தனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் கடந்த 19-ம் தேதி வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கும்பலில் இருந்த 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் கும்பலில் இருந்த மேலும் 14 பேரை போலீஸார் அடையாளம் கண்டுபிடித்துள்ளனர். அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுதொடர்பான தகவலை காங் போக்பி மாவட்டம் சைகுல் போலீஸ் நிலைய அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in