ஆந்திராவில் 108 அடி உயர  பஞ்சலோக ஸ்ரீராமர் சிலை - மத்திய அமைச்சர் அமித் ஷா அடிக்கல்

ஆந்திராவில் 108 அடி உயர  பஞ்சலோக ஸ்ரீராமர் சிலை - மத்திய அமைச்சர் அமித் ஷா அடிக்கல்
Updated on
1 min read

மந்திராலயம்: ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், மந்திராலயம் அருகே எமிங்கனூரு எனும் ஊரில் 10 ஏக்கரில், ரூ.300 கோடி செலவில் 108 அடி உயரத்தில் ஸ்ரீராமரின் பஞ்சலோக சிலை நிறுவப்பட உள்ளது. ஜெய் ஸ்ரீராம் அறக்கட்டளை மற்றும் மந்திராலயம் ஸ்ரீ ராகவேந்திரர் சுவாமி மடம் சார்பில் இச்சிலை நிறுவப்படுகிறது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா காணொலி மூலம் கலந்துகொண்டு, அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, "ஸ்ரீ ராகவேந்திரரை தரிசிக்க நாட்டில் உள்ள அவரது பக்தர்கள் லட்சக்கணக்கில் மந்திராலயம் வருகின்றனர்.

ஆனால், ஸ்ரீ ராகவேந்திரர், ஸ்ரீராமரின் தீவிர பக்தர் ஆவார். ஆதலால் தான் மந்திராலயத்தில் ராமருக்கு 108 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட உள்ளது. மந்திராலயத்தில் ஸ்ரீ ராமரின் பஞ்சலோக சிலை நிறுவப்பட உள்ளதால், இந்த இடம் உலக அளவில் சிறந்த ஆன்மீகம் மற்றும் சுற்றுலாத் தலமாக விளங்கும்” என்றார்.

இந்த நிகழ்ச்சியில், பீடாதிபதி சுபுதேந்திர சுவாமிகள், மாநில தொழிலாளர் நலத்துறைஅமைச்சர் ஜெயராம், முன்னாள் எம்.பி. டி.ஜி. வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in