Published : 20 Nov 2017 09:33 AM
Last Updated : 20 Nov 2017 09:33 AM

திருவனந்தபுரம் மேயர் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்திய பாஜக: கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு

திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் மீது பாஜகவினர் முன்கூட்டியே திட்டமிட்டு தாக்குதல் நடத்தி உள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டி உள்ளார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாநகராட்சி கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது மாநகரில் உயர் கோபுர மின் விளக்குகள் பொருத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் ஆளும் இடதுசாரி முன்னணி (எல்டிஎப்) மற்றும் எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்தக் கூட்டம் முடிந்த பிறகு மேயர் வி.கே.பிரசாந்த் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ) வெளியே வந்துள்ளார். அப்போது, பாஜகவைச் சேர்ந்த கிரிகுமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பிரசாந்த் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் அவரது சட்டை கிழிந்ததுடன் படுகாயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இதில் பிரசாந்த் மயக்கமடைந்துள்ளார். இதையடுத்து, எல்டிஎப் கவுன்சிலர்கள் வந்து மேயரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சண்டையின்போது மேலும் 4 கவுன்சிலர்கள் காயமடைந் தனர்.

இதுகுறித்து முதல்வர் பிரனராயி விஜயன் திருவனந்தபுரத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “மேயர் பிரசாந்த் மீதான தாக்குதல் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது. இதற்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மேயர் பிரசாந்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் வி.எம்.சுதீரன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x