Published : 26 Nov 2017 10:25 AM
Last Updated : 26 Nov 2017 10:25 AM

ஏழுமலையான் உண்டியலில் பழைய ரூ.500, 1000 நோட்டுகள்: மாற்ற இயலாமல் தேங்கி கிடக்கும் ரூ.15 கோடி

பழைய ரூ. 500, 1000 நோட்டுகளை ரத்து செய்து ஓராண்டாகியும், இப்போதும் திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில் பக்தர்கள் இந்த நோட்டுகளை காணிக்கைகளாக செலுத்தி வருகின்றனர். தற்போது ரூ. 15 கோடிக்கும் மேல் செல்லாத நோட்டுகள் தேவஸ்தான அலுவலகத்தில் மூட்டை கட்டி வைக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதி, பழைய ரூ. 500, 1,000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியாகி ஓராண்டு நிறைவடைந்துள்ளது. பழைய நோட்டுகளை மாற்ற கடந்த மார்ச் இறுதி வரை ரிசர்வ் வங்கி கெடு வழங்கியது. அதன்பின்னர் இந்த நோட்டுகள் செல்லாத காகிதங்களாகி விட்டன. ஆனால் சிலர் இந்த நோட்டுகளை கோயில் உண்டியல்களில் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.

கடந்த நவம்பர் 8 முதல், இந்த ஆண்டு மார்ச் மாதம் 31-ம் தேதி வரையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மட்டும் ரூ. 8 கோடி மதிப்புள்ள பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளன. இப்போது வரை இந்த நோட்டுகளை பக்தர்கள் உண்டியலில் செலுத்தி வருகின்றனர். மார்ச் மாதத்துக்குப் பிறகும் உண்டியலில் பக்தர்கள் பழைய நோட்டுகளை காணிக்கையாக செலுத்துவது தொடர்கிறது.

ரிசர்வ் வங்கி மவுனம்

தற்போது ரூ. 15 கோடி வரை பழைய ரூபாய் நோட்டுகள் தேங்கியுள்ளன. இவற்றை மாற்ற அவகாசம் வழங்க கோரி, பல முறை தேவஸ்தான அதிகாரிகள் ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதினர். ஆனால் இதுவரை எந்தவித பதிலும் இல்லாததால் இந்த நோட்டுகளை மூட்டை, மூட்டையாக கட்டி பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயில் மட்டுமின்றி, திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில், காணிப்பாக்கம் விநாயகர் கோயில், ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில், விஜயவாடா கனக துர்கையம்மன் கோயில் போன்ற பிரசித்தி பெற்ற பல கோயில்கள், நகர்ப்புறங்களில் உள்ள சில கோயில் உண்டியல்களிலும் இது போன்ற செல்லாத நோட்டுகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். இவை அனைத்தையும் கணக்கிட்டு பார்த்தால், ஆந்திர மாநிலத்தில் மட்டும் சுமார் ரூ. 30 கோடிக்கும் மேல் கோயில் உண்டியல்களில் செல்லாத பணம் தேங்கியுள்ளது. இவற்றை என்ன செய்வதென மாநில அறநிலைத்துறை அதிகாரிகள், தேவஸ்தானத்தினர் ஆலோசித்து வருகின்றனர்.

10 நிமிடங்களில்

வைகுண்ட ஏகாதசி வரும் டிசம்பர் 29-ம் தேதி வர உள்ளது. அன்றைய தினம் திருப்பதி ஏழுமலையான் கோயில் சொர்க்க வாசல் திறக்கப்படும். மறுநாள் துவாதசி வரை இந்த சொர்க்க வாசல் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த 2 நாட்களும் திருமலையில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும்.

இதேபோன்று ஆங்கில புத்தாண்டிற்கும் சுவாமியை தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருவது வழக்கம். இதனையொட்டி, வைகுண்ட துவாதசியான டிசம்பர் 30 மற்றும் ஜனவரி 1-ம் தேதிக்கு பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் நேற்று ஆன்லைன் மூலம் ரூ. 300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை விநியோகம் செய்தது. துவாதசிக்கு 5,000, ஆங்கில புத்தாண்டிற்கு 10,000 டிக்கெட்டுகளை நேற்று காலை 10 மணிக்கு ஆன்லைன் டிக்கெட் விநியோகம் தொடங்கியது. ஆனால் வெறும் 10 நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்ததால், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x