

துரா: மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மாவின் அலுவலகத்தை வன்முறை கும்பல் ஒன்று தாக்கியதில் பாதுகாப்பு படையினர் 5 பேர் காயமடைந்துள்ளனர்.
மேகாலயாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் முதல்வராக கான்ராட் சங்மா உள்ளார். இதனிடையே, அம்மாநிலத்தில் உள்ள காரோ மலைப்பிரதேச பகுதியில் வசிக்கும் மக்கள் மாநிலத்தின் குளிர்கால தலைநகராக துராவை அறிவிக்கக்கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, இதே துராவில் காரோ மலைகளை உள்ளடக்கிய மாநிலத்தின் மேற்குப் பகுதியின் மையமாக முதல்வர் கான்ராட் சங்மாவின் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் மேகாலயாவின் குளிர்கால தலைநகராக துராவை நியமிப்பது மற்றும் 51 ஆண்டுகால வேலை இட ஒதுக்கீடு கொள்கையை முறையாக அமல்படுத்துவது குறித்து சில உள்ளூர் அமைப்புகளின் தலைவர்களுடன் முதல்வர் கான்ராட் சங்மா ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டிருக்கும்போது அலுவலகத்துக்கு வெளியே நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு கற்களை வீசி தாக்கத் தொடங்கினர்.
இந்த தாக்குதலில் முதல்வருக்கு பாதுகாப்பு வழங்கும் பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஐந்து போலீஸ்காரர்கள் காயமடைந்தனர், மேலும் முதல்வர் அலுவலகாத்தின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. இதையடுத்து வன்முறை கும்பலை கலைக்க போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். வன்முறை கும்பலின் தாக்குதலில் முதல்வர் உள்ளிட்ட மற்றவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. எனினும், அக்கும்பல் முதல்வர் அலுவலக சாலையை மறித்திருப்பதால், கான்ராட் சங்மாவால் அலுவலகத்தை விட்டு வெளியேற முடியவில்லை.
முதல்வர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "நிலைமை கட்டுக்குள் உள்ளது, ஆனால் பதட்டமாக உள்ளது" எனத் தெரிவிக்கபட்டுள்ளது.
அதேபோல், “இன்று நடந்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. [வன்முறையைத்] தூண்டியவர்களின் முழு வீடியோ பதிவும் எங்களிடம் உள்ளது, சட்டத்தின்படி தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று முதல்வர் கான்ராட் சங்மா தெரிவித்துள்ளார்.