இந்திய குடியுரிமை வழங்கக்கோரி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு பாகிஸ்தான் பெண் சீமா ஹைதர் கருணை மனு

சச்சின் மீனாவுடன் பாகிஸ்தான் பெண் சீமா ஹைதர்.
சச்சின் மீனாவுடன் பாகிஸ்தான் பெண் சீமா ஹைதர்.
Updated on
2 min read

புதுடெல்லி: இந்திய குடியுரிமை வழங்க கோரி பாகிஸ்தான் பெண் சீமா ஹைதர் குடியரசுத் தலைவரிடம் கருணை மனு அளித்துள்ளார்.

பாகிஸ்தானின் கராச்சி நகரை சேர்ந்தவர் சீமா ஹைதர் (27). இவரது கணவர் சவுதி அரேபியாவில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 4 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

கரோனா பெருந்தொற்று காலத்தில் சீமா ஹைதர், ஆன்லைனில் பப்ஜி விளையாட்டில் மூழ்கினார். அப்போது டெல்லி அருகேயுள்ள கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த சச்சின் மீனாவுடன் (22) அவருக்கு பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்தது. கடந்த மே மாதம் சீமா ஹைதர் தனது 4 குழந்தைகளுடன் நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தார்.

டெல்லி அருகேயுள்ள கிரேட்டர் நொய்டாவில் உள்ள சச்சினின் வீட்டில் இரு மாதங்களாக அவர் வசித்து வருகிறார். அவர் மீது சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீஸில் தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர். பின்னர் விசாரணை நீதிமன்றம் இருவரையும் ஜாமீனில் விடுதலை செய்தது. இந்த சூழலில் தனக்கும் 4 குழந்தைகளுக்கும் இந்திய குடியுரிமை வழங்கக் கோரி பாகிஸ்தான் பெண் சீமா ஹைதர், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் கருணை மனு அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள பசுபதிநாதர் கோயிலில் நானும் சச்சின் மீனாவும் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டோம். நானும் எனது குழந்தைகளும் இந்துவாக மாறிவிட்டோம். பாகிஸ்தான் பாடகர் அதான் சமிக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டு உள்ளது. இங்கிலாந்து குடியுரிமை பெற்ற நடிகை அலியா பட் இந்தியாவில் வசிக்கிறார். கனடா குடியுரிமை பெற்ற நடிகர் அக்சய் குமார் இந்தியாவில் வசிக்கிறார்.

லைலா-மஜ்னு, ஹீர்-ரஞ்சா, ஷிரின்- ஃபர்ஹாத், சோஹ்னி- மஹிவால் காதலைப் போன்று எங்கள் காதலும் புனிதமானது. என்னை பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பினால் கண்டிப்பாக என்னை கொலை செய்து விடுவார்கள். பெண்களைப் போற்றும் இந்தியாவில் கண்ணியத்துடன் வாழ எனக்கு அனுமதி வழங்க வேண்டும். எனக்கும் எனது 4 குழந்தைகளுக்கும் கருணை அடிப்படையில் இந்திய குடியுரிமை வழங்க வேண்டும். இவ்வாறு சீமா ஹைதர் தனது மனுவில் கூறியுள்ளார்.

உளவாளியா, அப்பாவி பெண்ணா? சீமா ஹைதர் உளவாளியா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக உத்தர பிரதேச தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தி உள்ளனர். இதுகுறித்து மாநில போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது:

சீமா ஹைதரிடம் 2 பாஸ்போர்ட்கள் உள்ளன. கடந்த மே 8-ம் தேதி அவர் புதிய பாஸ்போர்ட் பெற்றுள்ளார். அடுத்த இரு நாட்களில் மே 10-ம் தேதி அவர் பாகிஸ்தானில் இருந்து வெளியேறி இருக்கிறார். பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், நேபாளம் நாடுகளின் சிம் கார்டுகளை பயன்படுத்தியுள்ளார். அந்த சிம் கார்டுகளையும் அவர் பயன்படுத்திய 5 செல்போன்களையும் அழித்துள்ளார். சீமாவின் அண்ணன், மாமா ஆகியோர் பாகிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர்.

சீமா ஹைதரின் தற்போதைய கணவர் சச்சின் மீனா உத்தர பிரதேசத்தின் மேற்கு பகுதியை சேர்ந்தவர். அவரது இந்தி மொழி உச்சரிப்புக்கூட தெளிவாக இல்லை. ஆனால் பாகிஸ்தானில் பிறந்த சீமா ஹைதரின் இந்தி உச்சரிப்பு மிகவும் தெளிவாக இருக்கிறது. 5-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளதாகக் கூறும் அவர் ஆங்கிலத்திலும் சரளமாக பேசுகிறார். முஸ்லிம் பெண்ணான சீமா, இந்திய பெண் போன்று முழுமையாக மாறி இருக்கிறார். நடை, உடை பாவனைகளும் இந்திய பெண் போன்றே இருக்கிறது. இந்து மத பாரம்பரிய நடைமுறைகளையும் நன்றாக அறிந்துள்ளார். பாகிஸ்தானில் இருந்து 15 உளவாளி பெண்கள், இந்து பெண்களைப் போன்று நடித்து உளவு வேலைகளில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்திருக்கிறது. எனவே சீமா ஹைதர் மீதும் சந்தேகம் எழுகிறது. அவர் எவ்வாறு இந்தியாவுக்குள் நுழைந்தார் என்பது குறித்து விசாரணை நடத்த உளவுத் துறை அதிகாரிகள் நேபாளத்துக்கு சென்றுள்ளனர். அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தவும் திட்டமிடப்பட்டு இருக்கிறது. இவ்வாறு போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in