

தேசிய நீதி ஆணையம் அமைக்க மத்திய அரசு முயற்சி மேற்கொள்ளும் என சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மக்களவையில் செவ்வாய்க் கிழமை உறுதி அளித்தார்.
பல்வேறு ஊழல் புகார்களில் சிக்கிய நீதிபதியின் பதவி உயர் வுக்காக தமிழகத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட அரசியல் கட்சி அன்றைய மத்திய அரசுக்கு நெருக் கடி அளித்து பணிய வைத்தது என்று பிரஸ் கவுன்சில் தலைவரும் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜு குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த விவகாரம் நாடாளு மன்றத்தின் இரு அவைகளை யும் 2-வது நாளாக செவ்வாய்க் கிழமையும் ஸ்தம்பிக்க செய்தது.
மக்களவையில் கேள்வி நேரத்துக்கு முன்னதாக அதிமுக வின் 37 உறுப்பினர்களும் இந்தப் பிரச்சினையை எழுப்பினர். அவர்களுக்கு எதிராக காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷமிட்டனர்.
இதனால் ஏற்பட்ட அமளியால் மக்களவை இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டது.
மாநிலங்களவையிலும் அதிமுக உறுப்பினர்களின் அமளியால் அவை ஒருமுறை ஒத்தி வைக்கப்பட்டது.
தம்பிதுரை கேள்வி
மக்களவையில் அதிமுக உறுப் பினர் தம்பிதுரை பேசியபோது, ‘‘நீதிபதிகள் நியமனத்தில் அமைச்சர்கள் எப்படி தலையிட முடியும், இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.
இதற்கு கடும் எதிர்ப்புத் தெரி வித்த காங்கிரஸ் உறுப்பினர்கள், ‘‘நீதிபதிகள் பதவி நீக்கம் தவிர மற்றவைகள் குறித்து அவையில் விவாதிக்க முடியாது” எனத் தெரிவித்தனர். இரு தரப்பினரும் கோஷமிட்டதால் அவையில் அமளி அதிகமானது.
அப்போது மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குறுக்கிட்டுப் பேசியதாவது:
“சம்பந்தப்பட்ட நீதிபதிகள் மூவரும் ஓய்வு பெற்று விட்டனர். புகார்களில் சிக்கிய மற்றொரு நீதிபதி இறந்துவிட்டார். கடிகாரத்தின் முட்களை திருப்பி வைக்கமுடியாது. எனினும் நீதிபதிகள் நியமன நடைமுறைகளை மேம்படுத்த வேண்டிய அவசியம் இப்போது எழுந்துள்ளது. இதற்காக தேசிய நீதி ஆணையம் அமைப்பது குறித்து மத்திய அரசு கவனம் செலுத்தும்” என்று தெரிவித்தார்.
தொடரும் சிக்கல்
நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என கடந்த பத்து ஆண்டுகளுக் கும் மேலாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக கடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் சட்டத்துறை அமைச்சராக இருந்த அருண்ஜேட்லி ஒரு மசோதா கொண்டு வர முயற்சி செய்தார். அந்த மசோதா கிடப்பில் போடப்பட்டது.
அதன் பிறகு வந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் சட்டத் துறை அமைச்சராக இருந்த கபில் சிபல், இந்த மசோதாவில் சிறிய மாற்றங்கள் செய்து ’நீதிபதி நியமன கமிஷன்’என்ற நடைமுறையை அமல்படுத்த முயன்றார்.
இதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏற்றுக் கொள்ள மறுப்பதால் சிக்கல் நீடிக்கிறது. தற்போது நீதிபதி கட்ஜுவின் புகாரை தொடர்ந்து ‘தேசிய நீதி ஆணையம்’அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் சட்டத் துறை அமைச்சராக இருந்த வீரப்ப மொய்லி கூறியபோது, ‘‘இது நீதித்துறையுடன் மறைமுகமான மோதலை உருவாக்கும், இந்த விஷயத்தில் தேசிய அளவிலான ஆலோசனை அவசியம்'’ எனத் தெரிவித்தார்.