மோடி ஆட்சி விரைவில் கவிழும்: கர்நாடக முதல்வர் சித்தராமையா பேட்டி

மோடி ஆட்சி விரைவில் கவிழும்: கர்நாடக முதல்வர் சித்தராமையா பேட்டி
Updated on
1 min read

'மோடி தலைமையிலான மத்திய அரசு விரைவில் கவிழும்' என கர்நாடக முதல்வர் சித்தராமையா செவ்வாய்க்கிழமை பெங்களூரில் தெரிவித்தார்.

அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய கர்நாடக முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி (பாஜக) தலைவருமான ஜெகதீஷ் ஷெட்டர், 'சித்தராமையா த‌மது 5 ஆண்டு கால பதவி காலத்தை முழுமையாக நிறைவு செய்ய மாட்டார்' என தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. எதிர்க்கட்சியான பாஜக 17 இடங்களில் வெற்றிபெற்றது. காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு குறித்து கட்சி மேலிடத்திற்கு விளக்கம் அளிப்பதற்காக அம்மாநில முதல்வர் சித்தராமையாவும், காங்கிரஸ் மாநில தலைவர் ஜி.பரமேஷ்வரும் செவ்வாய்க்கிழமை பெங்களூரில் இருந்து டெல்லி சென்றனர்.

மோடி ஆட்சி கவிழும்

இதற்கு முன்னதாக சித்த ராமையா செய்தியாளர்களிடம் பேசுகையில்,''கர்நாடகாவில் காங்கிரஸின் தோல்விக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.காங்கிரஸ் வேட்பாளர்களின் தோல்விக்கு எதிர்க்கட்சிகள் காரணம் அல்ல.காங்கிரஸ் கட்சியினரே காரணம்.கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் மீது கட்சித் தலைமை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கர்நாடகாவில் உள்ள 28 இடங்களில் 20 இடங்களைக் காங்கிரஸ் கைப்பற்றும் நிலை இருந்தது.அதனை பொய்யாக்கிய கட்சி விரோதிகளை நீக்குமாறு பரிந்துரைக்கப் போகிறேன்.

கர்நாடகாவில் பாஜக வேட்பாளர்கள் மோடி அலையால் வெற்றி பெறவில்லை. ஏனென்றால் பெங்களூர் ஊரகம், கோலார், குல்பர்கா, சிக்பளாப்பூர், தும்கூர் உள்ளிட்ட பல தொகுதிகளில் அவர்களின் பிரசாரம் எடுபடவில்லை.பாஜக வெற்றிபெற தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் ஆதரவாக இருந்தது.

ம‌த்தியில் பெரும்பான்மை யுடன் நரேந்திர மோடி தலைமை யிலான பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றி இருந்தாலும், விலை வாசி உயர்வின் காரணமாக விரை வில் ஆட்சி கவிழும்.பா.ஜ.க.வின் ஒரு மாத ஆட்சியில் வரலாறு காணாத வகையில் விலைவாசி அதிகரித்துள்ளது''என்றார்.

சித்தராமையா ஆட்சி நிலைக்காது! ஜெகதீஷ் ஷெட்டர் பதிலடி 

சித்தராமையாவின் கருத்து குறித்து எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் கூறுகையில்,''மோடியின் ஒரு மாத கால ஆட்சியை பற்றி பேச சித்தராமையாவிற்கு அருகதை இல்லை.விலைவாசி உயர்வு, மின் வெட்டு, சட்டம் ஒழுங்கு, காவிரி உள்ளிட்ட பல‌ பிரச்சினை களில் மக்கள் ஆளும் காங்கிரஸ் அரசின் மீது கொதிப்படைந்துள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் முதல்வர் சித்தராமையாவிற்கும் அவருடைய சக அமைச்சர்கள் சிலருக்கும் இடையே கடந்த 6 மாதங்களாக பனிப்போர் நடந்து வருகிறது.மேலும் சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து அவருக்கு எதிராக செயல்ப‌ட்டு வருகின்றனர். இதனால் மாநிலத்தின் வளர்ச்சிப் பணிகள் முழுமையாக தடைப்பட்டுள்ளன.

மக்களின் அதிருப்தி காரணமாகவும், சொந்த கட்சியினரின் நெருக்கடியாலும் சித்தராமையாவின் ஆட்சி கூடிய விரைவில் கவிழும். இன்னும் ஓர் ஆண்டிற்குள் சித்தராமையாவின் பதவியோ, காங்கிரஸ் அரசோ கவிழும் வாய்ப்பு இருக்கிறது' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in