Published : 17 Nov 2017 04:30 PM
Last Updated : 17 Nov 2017 04:30 PM

குஜராத் தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் 36 தொகுதிகள்: பாஜக புது வியூகம்

குஜராத் சட்டப்பேரவை தேர்தலில், கடும் போட்டி நிலவும் 36 தொகுதிகளை அடையாளம் கண்டு அங்கு தேர்தல் பணிகளை ஆளும் பாஜக முடுக்கி விட்டுள்ளது.

குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் பாஜகவுக்கும், எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோரின் சொந்த மாநிலம் என்பதால் குஜராத் தேர்தல் பாஜகவுக்கு கவுரவப் பிரச்சினையாக உள்ளது.

அம்மாநிலத்தில் 22 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பகீரத பிரயத்தனம் செய்து வருகிறது. அதேசமயம் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் அக்கட்சியின் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் குஜராத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில், குஜராத்தில் கடந்த 2012-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாஜக 116 இடங்களிலும், காங்கிரஸ் 60 இடங்களிலும், மற்ற கட்சிகள் 6 இடங்களிலும் வெற்றி பெற்றன.

 

கடந்த தேர்தலில் 36 தொகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி தோல்வி முடிவாகியுள்ளது. இவற்றில் பாஜக 14 தொகுதிகளிலும், காங்கிரஸ் 22 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த தேர்தலில், முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் தலைமையிலான குஜராத் பரிவர்த்தன் கட்சி போட்டியிட்டது. அக்கட்சி பெற்ற வாக்குகளால், 16 தொகுதிகளில் பாஜக தோல்வியடைந்தது. இவற்றில் 10 தொகுதிகளில் ஆயிரத்திற்கும் குறைவான ஓட்டுகளில் வெற்றி தோல்வி முடிவாகியுள்ளது. இந்த தொகுதிகளில் பாஜக ஒரிடத்திலும், காங்கிரஸ் 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. மற்ற கட்சிகள் இரு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன.

பாஜகவைப் பொறுத்தவரை இந்த தொகுதிகள் மிக முக்கியமானவை. இந்த தொகுதிகள் மீது அதிக கவனம் செலுத்த பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளது. குஜராத் பரிவர்த்தன் கட்சியின் போட்டி இல்லாத நிலையில், அந்த தொகுதியை கைப்பற்ற முடியும் என பாஜக நம்புகிறது. ஆனால், இந்த தொகுதிகளில் படேல் போராட்டக்குழுவினர் கடுமையான எதிர்ப்பை பாஜக சந்திக்க வேண்டிய சூழல் உள்ளது.

எனவே, அங்கு எதிர்ப்பாளர்களை சமாளித்து சாதகமான சூழலை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக அந்தத் தொகுதிகளில் சமூக தலைவர்களை சந்தித்து ஆதரவை திரட்டவும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. மேலும் அந்த தொகுதிகளில் சிலவற்றில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷா சுற்றுப்பயணம் செய்யவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x