

பயங்கரவாதி ஹபீஸ் சயீதை, பத்திரிகையாளர் பிரதாப் வைதிக் சந்தித்ததை, அரசோடு தொடர்புபடுத்தக் கூடாது என்றும், இந்த பிரச்சினையில் மத்திய அரசை பொறுப்பேற்கக் கூறுவதை எந்த வகையிலும் ஏற்க முடியாது என்றும் சிவ சேனை தெரிவித்துள்ளது.
அதேவேளையில், ஹபீஸ் சயீதை சந்தித்த வைதிக் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.
இந்தப் பிரச்சினைக் குறித்து சிவ சேனையின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் வெளியிட்டக் கட்டுரையின் விவரம்:
'பயங்கரவாதி உடனான பத்திரிகையாளர் பிரதாப் வைதிக்கின் சந்திப்புக்கு, மத்திய அரசு எப்படி பொறுப்பேற்க முடியும்? ஒரு பத்திரிகையாளர் நினைத்தால், யாரை வேண்டுமானாலும் சந்தித்து பேட்டிக் காணலாம். காங்கிரஸ் கட்சி மத்தியில், ஆட்சி நடந்திருந்தாலும் இந்தச் சந்திப்பு நடந்திருக்கும். இப்போது பாஜக ஆட்சியில் உள்ளதால் மட்டும் அரசை குற்றம்ச்சாட்டக் கூடாது.
ஆனால், இந்தியாவுக்கு எதிராக செயல்படும் ஒரு பயங்கரவாதியுடனான சந்திப்பினை அனுமதிக்கக் கூடாது. பின்பு எவர் வேண்டுமானாலும், தேசத்திற்கு எதிராக செயல்படும் பயங்கரவாதிகளைச் சந்தித்து, அவர்களுடன் பிரியாணி சாப்பிடலாம் என்ற நிலை வந்துவிடும். ஆகையால், பத்திரிகையாளரை வைதிக்கை தண்டிக்க வேண்டும்.
ஒரு தனி நபருக்கு நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களை, ஒரு பயங்கரவாதியுடன் பேச்சு நடத்த யார் அனுமதி தந்தது? இதனை சிறிதளவும் உற்சாகப்படுத்தாமால் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாதாரண இந்தியர்களுக்கு விசா வழங்க அனுமதி மறுக்கும் பாகிஸ்தான் அரசு, எப்படி பயங்கரவாதி ஹபீஸுடன், இந்திய பத்திரிகையாளர் பேட்டிக்காக அனுமதித்து விசா வழங்கியது என்று தெரியவில்லை. இதில் பாகிஸ்தான் அரசு மற்றும் அதன் உள்நாட்டு புலனாய்வு மையத்தையும் குற்றம்ச்சாட்ட வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடியின் அரசு, நல்ல ஆரம்பத்தை கண்டு வருகிறது. இந்த அரசை, இதுபோன்ற தனிப்பட்ட மனிதர் ஒருவரின் தவறினை முன்வைத்து குற்றம்சாட்டுவது நியாயமாகாது. வெளியுறவுத் துறை அமைச்சர், இது தொடர்பாக ஏற்கக் கூடிய பதிலை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்' என்று அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டது.
இது குறித்து சிவ சேனையின் மூத்த தலைவர்களுல் ஒருவரான சஞ்சய் ரவுத் கூறும்போது, "பயங்கரவாதியை சந்தித்த வைதிக்கை தண்டிக்க வேண்டும் என்றும். மேலும், வைதிக்கை அப்சல் குரு அல்லது அஜ்மல் கசாப் போலவே தான் பார்க்க வேண்டும்" என்றார்.