Last Updated : 30 Nov, 2017 09:04 AM

 

Published : 30 Nov 2017 09:04 AM
Last Updated : 30 Nov 2017 09:04 AM

ராஜீவ் காந்தியைப் போல துணிந்து செயல்படுங்கள்

 

லக வரலாற்றில் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற ஒரே பீரங்கி ‘போஃபர்ஸ்’ மட்டும்தான். பீரங்கி விவகாரத்துக்குப் பின்னால் நின்ற விசுவநாத் பிரதாப் சிங் அரசியல் அரங்கில் குறிப்பிடத்தக்கவர்.

1988-ல் நடந்த அலாகாபாத் இடைத் தேர்தலில் ராஜீவ் கட்சியைத் தோற்கடித்தே தீருவது என்ற முடிவோடு அவர் அரசியல் யுத்தத்தைத் தொடங்கினார். கிராமம் கிராமமாகப் பேசினார். அவர் சொன்னது மிகவும் எளிமையானது: “உங்கள் வீடுகள் களவாடப்படுகின்றன; எப்படி? நீங்கள் ஒரு கட்டு பீடி வாங்கும்போதும் தீப்பெட்டி வாங்கும்போதும் நீங்கள் கொடுக்கும் அணாவில் சில காசுகள் அரசுக்கு மறைமுக வரியாகக் கிடைக்கிறது. அந்த வரிப் பணத்திலிருந்துதான் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்களைக் கட்டுகிறது அரசு, ராணுவத்துக்கு ஆயுதங்களை வாங்குகிறது. உங்கள் பணத்திலிருந்து கிடைக்கும் வருவாயை ஒருவர் திருடினால் அது உங்கள் வீட்டில் திருடினதாக ஆகாதா?” என்றார்.

 

30 ஆண்டுகள் ஓடிவிட்டன. போஃபர்ஸ் பீரங்கி பேரத்தில் தரகு வாங்கியதாக யாரும் பிடிபடவும் இல்லை, தண்டிக்கப்படவும் இல்லை. கார்கில் மலை முகட்டை பாகிஸ்தான் ராணுவம் ஆக்கிரமித்தபோது அவர்களை விரட்டவும் இந்திய எல்லையை மீட்கவும் பெரிதும் உதவியவை போஃபர்ஸ் பீரங்கிகள்தான்.

இந்த 30 ஆண்டுகளில் மேலும் ஒரு போஃபர்ஸ் பீரங்கிகூட வாங்கப்படவில்லை, உள்நாட்டில் தயாரிக்கப்படவுமில்லை. ‘தனுஷ்’ என்ற பெயரில் மாதிரி பீரங்கியைத் தயாரிக்க முயற்சித்தார்கள். அந்த பீரங்கி பேரம் தொடர்பாக அரசியல் களத்தில் எழுந்த புகார்கள் காரணமாக அதைப் பற்றிப் பேசவும், சிந்திக்கவும் கூட ஆட்சியாளர்கள் தயங்கினர்.

வெங்காயத் திருடன் கதை

இந்தியாவின் ராணுவக் கொள்முதல் என்பது கிராமத்தில் வெங்காயம் திருடிய முட்டாளின் கதையைப் போலாகிவிட்டது. ஒரு கிராமத்தில் ஒருவன் வெங்காயம் திருடிவிட்டு சிக்கிக்கொண்டான். பஞ்சாயத்தார் கேட்டார்கள் “100 செருப்படி அல்லது 100 வெங்காயத்தைப் பச்சையாக சாப்பிடுவது எந்த தண்டனை உனக்கு வேண்டும்?” என்று. அவன் முதலில், வெங்காயத்தைச் சாப்பிடும் தண்டனையை ஏற்றான். 10 வெங்காயத்தைச் சாப்பிட்டவுடன், “இது போதும் என்னைச் செருப்பால் அடித்துவிடுங்கள்” என்றான். 10 முறை செருப்பால் அடித்ததும், “இது வேண்டாம் பழையபடி வெங்காயத்தையே சாப்பிட்டுவிடுகிறேன்” என்றான். மறுபடியும் 10 வெங்காயத்தைச் சாப்பிட்டதும் “நிறுத்துங்கள், செருப்படியைத் தொடங்குங்கள்” என்றான். முடிவில் 100 செருப்படியையும் பெற்றுக்கொண்டு 100 வெங்காயத்தையும் தின்று முடித்தான். 1977-க்குப் பிறகு நாம் ராணுவக் கொள்முதலை நிகழ்த்திவரும் கதையும் இதுதான்!

1977-ஐ அடிப்படை ஆண்டாகக் கொள்வோம். அப்போதுதான் ஜனதா என்ற காங்கிரஸ் அல்லாத கட்சி ஆட்சிக்கு வந்தது. சோவியத் யூனியன் அல்லாத நாட்டிடம் ஆயுதம் வாங்க முற்பட்டதும் அப்போதுதான். ஜனதா ஆட்சி முதலில் பரிசீலித்தது ஆங்கிலேய - பிரெஞ்சு கூட்டுத் தயாரிப்பான ஜாகுவார். அதில் லஞ்சம் வாங்கப்படுவதாக போட்டி நிறுவனங்கள் செய்தித்தாள்களில் கட்டுரைகளை எழுத வைத்தன. ஜாகுவாரும் வேறு காரணங்களுக்காக சர்ச்சையில் சிக்கியது. இப்போதும் கூட இந்திய விமானப் படையில் 100-க்கும் மேற்பட்ட ஜாகுவார்கள் பயன்பாட்டில் உள்ளன.

இந்திரா மீண்டும் ஆட்சிக்கு வந்து சோவியத் யூனியனிடம் வாங்க முற்பட்டார். அடுத்து ஆட்சிக்கு வந்த ராஜீவ் காந்தி புரட்சிகரமான மாறுதலைச் செய்தார். முப்படைகளுக்கும் தேவைப்பட்ட நவீன ஆயுதங்களை வாங்குவதில் இந்திரா-ராஜீவ் காலத்தில்தான் வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

பிரான்சிடமிருந்து மிராஜ்-2000 போர் விமானங்கள், சுவீடனிடமிருந்து போஃபர்ஸ் பீரங்கிகள், மிலன் – மாத்ரா (பிரெஞ்சு) ஏவுகணைகள், ஜெர்மனியிடமிருந்து ‘டைப்-209’ நீர்மூழ்கிகள் ஆகியவற்றை வாங்கினார் ராஜீவ். ஒவ்வொரு கொள்முதலிலும் ஊழல் நடந்ததாகப் புகார்கள் கூறப்பட்டன. இதனால், எல்லாம் முதல் தவணை வாங்கிய கையோடு நின்றது. தொழில்நுட்பமும் இந்தியாவுக்குத் தரப்படவில்லை. இந்தியாவிலும் கூட்டாகத் தயாரிக்கப்படவில்லை. சோவியத்திடமிருந்து ‘பிஎம்பி’ ரக கவச வாகனங்களையும் ‘கிலோ’ ரக நீர்மூழ்கிகளையும் வாங்கிய ராஜீவ், அணு நீர்மூழ்கி ஒன்றையும் குத்தகைக்கு எடுக்க வைத்தார்.

ஆயுதங்களை வாங்குவதில் பாஜக ஆட்சிகள் மிகவும் பின்தங்கியிருக்கின்றன. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது ‘சவப்பெட்டி வாங்கியதில் ஊழல்’ என்று பெரிதாகப் பேசப்பட்டது. (அது வெறும் கற்பனைக் குற்றச்சாட்டு). மோடி அரசு வாங்கும் என்று பெரிதாக எதிர்பார்க்கப்பட்டது. இதுவரையில் ‘36 ரஃபேல்’ விமானங்கள் வாங்க மட்டும் ஆர்டர் தரப்பட்டிருக்கிறது. ஏ.கே. அந்தோனி பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோதும் ராணுவக் கொள்முதலில் மிகவும் தயங்கித்தயங்கித்தான் செயல்பட்டார். போஃபர்ஸ் பீரங்கி பேரம் பற்றிய பேய் இப்போது பாஜக ஆட்சியிலும் பிடறியைப் பிடித்து ஆட்டுகிறது.

ராஜீவ் காந்தியைப் போல எல்லா படைப்பிரிவுகளுக்கும் தேவைப்படுவனவற்றைத் துணிந்து கொள்முதல் செய்ய வேண்டும்.

 

 

தமிழில்: ஜூரி

சேகர் குப்தா, ‘தி பிரின்ட்’ தலைவர்

முதன்மை ஆசிரியர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x