மதம் மாறிய பெண்ணை முஸ்லிம் கணவருடன் அனுப்பி வைத்த ராஜஸ்தான் உயர் நீதிமன்றம்

மதம் மாறிய பெண்ணை முஸ்லிம் கணவருடன் அனுப்பி வைத்த ராஜஸ்தான் உயர் நீதிமன்றம்

Published on

கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு முஸ்லிம் இளைஞரைத் திருமணம் செய்ததாகக் கூறப்பட்ட 22 வயதுப் பெண்ணை ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் கணவருடனே அனுப்பி வைத்தது.

பாயல் சிங்வி என்று அழைக்கப்பட்ட அப்பெண் , ஆரிஃபா என்ற பெயரில் முஸ்லிம் பெண்ணாக மதம் மாறினார். சில நாட்களுக்கு முன் அவர் வீட்டில் இருந்து மாயமானதை அடுத்து, அவரின் சகோதரர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார்.

அதில், ''முஸ்லிம் இளைஞர் ஃபயஸ் மோடி என் சகோதரியைப் பல மாதங்களாகப் பின்தொடர்ந்துள்ளார். ஒருமுறை அவர் கல்லூரிக்குச் செல்லும்போது ஃபயஸ் அவரை மிரட்டிக் கடத்திச் சென்றுவிட்டார். இதையடுத்து கடும் வற்புறுத்தலின் பின்னணியில் சகோதரியின் திருமணம் நடந்துள்ளது'' என்று கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து ஆரிஃபா நீதிமன்றத்தில் ஆஜரானார்.

அப்போது அவரின் மதமாற்றம் குறித்தும் திருமணம் குறித்தும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அப்போது ஆரிஃபா, கணவர் ஃபயஸ் மோடியைத் தன் சுய விருப்பத்தின் பேரிலேயே மணம் செய்ததாகக் கூறினார்.

இதுகுறித்துப் பேசிய நீதிபதி கோபால் கிருஷ்ணா வியாஸ் தலைமையிலான அமர்வு, ''ஆரிஃபாவுக்கு அவரின் சுய விருப்பத்தின் பேரில் திருமணம் செய்துகொள்ள முழு உரிமை உண்டு, அதற்கான வயதை அவர் அடைந்துவிட்டார். அவரின் பாதுகாப்பைக் காவல்துறையினரே உறுதி செய்யவேண்டும்'' என்று கூறியுள்ளது.

இதனிடையே வலதுசாரி அமைப்புகள் ஆரிஃபாவுக்கு எதிராக நீதிமன்ற வளாகத்தில் கோஷங்களை எழுப்பின.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in