

முதியோர், மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை உயர்வு: முதியோர், கணவரை இழந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்த தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி முதியோர் உதவித் தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.1,200-ஆகவும், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.1,500-ஆகவும், கணவரை இழந்த பெண்களுக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.1,200-ஆகவும் உயர்த்த தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்பதல் அளிக்கப்பட்டுள்ளது.
மகளிர் உரிமைத் திட்ட முகாம்கள்: முதல்வர் அறிவுறுத்தல்: மகளிர் உரிமைத் திட்ட முகாம்களை அமைச்சர்கள் பார்வையிட வேண்டும் என்று அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
வெளிச்சத்துக்கு வரும் மணிப்பூர் வன்கொடுமைகள்: மணிப்பூரின் தெளபால் மாவட்டத்தில் மூன்று பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் நடந்து இரண்டு நாட்களுக்கு பின்னர், மே 6-ம் தேதி 45 வயது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது எரிந்த உடலின் புகைப்படம் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மே 3-ம் தேதி கலவரம் தொடங்கியதில் இருந்து அங்கு பெண்களுக்கு எதிராக நடந்து வரும் வன்கொடுமைகளின் தொடர்ச்சியான சம்பவங்களில் இந்தக் கொடூரமும் ஒன்று.
அதேபோல் காங்போக்பி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள மற்றொரு எஃப்ஐஆர் தகவலின்படி, மே 4-ம் தேதி, கிழக்கு இம்பாலில் இரண்டு பெண்கள் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். அந்தப் பெண்கள் கிழக்கு இம்பாலில் உள்ள கார்கள் சுத்தம் செய்யும் கடை ஒன்றில் வேலை செய்துள்ளனர். கொல்லப்பட்ட பெண்களில் ஒருவரது தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே மணிப்பூர் தலைநகர் இம்பாலில் சனிக்கிழமை மீண்டும் புதிதாக வன்முறை வெடித்தது. காரி பகுதியில் இரு முக்கிய சாலைகளை பெண்கள் முற்றுகையிட்டனர். டயர்களைக் கொளுத்திபோட்டு அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்த போலீஸார், ராணுவம், அதிரடிப் படையினர் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து அப்பகுதியிலும் அருகில் உள்ள பல பகுதிகளிலும் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.
மணிப்பூர் கொடூரம்: கேள்விகளை அடுக்கும் காங்கிரஸ்: மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் இருவர் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட கொடூரம் பற்றி மாநில முதல்வர் பைரன் சிங்குக்கும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் எப்படி தெரியாமல் போனது என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவைத் துணைத் தலைவர் பிரமோத் திவாரி கூறுகையில், "உள்துறை அமைச்சர் அமித் ஷா மூன்று நாட்கள் மணிப்பூருக்குச் சென்று தங்கி இருந்தார். அங்கு அவர் அனைத்து சமூக குழுக்களையும் சந்தித்ததாக தெரிவித்தார். அப்போது யாரும் அவரிடம் மணிப்பூரில் என்ன நடக்கிறது என்று தெரிவிக்கவில்லையா? உளவுத் துறை என்ன செய்து கொண்டிருக்கிறது? அதேபோல நூற்றுக்கான சம்பவங்கள் நடந்திருக்கின்ற என்று மாநில முதல்வர் பைரன் சிங் இப்போது சொல்கிறார். அப்படியென்றால், அமித் ஷா அங்கு வந்தபோது அவரிடமிருந்து அச்சம்பவங்களை அவர் மறைத்தாரா?. இது அமித் ஷாவுக்கு தெரியும் என்றால், அதை நாட்டுக்குச் சொல்லாமல் மறைத்தாரா? என்று கேள்விக் கணைகளை தொடுத்துள்ளார்.
“ராஜஸ்தான் உணர்வுகளை புண்படுத்திவிட்டார் பிரதமர் மோடி” : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடருக்கு முன்பாக மணிப்பூர் கொடூர சம்பவம் குறித்து பேசிய பிரதமர் மோடி, ராஜஸ்தானின் உணர்வுகள் புண்படுத்திவிட்டதாக அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் காட்டமாக குற்றம்சாட்டியுள்ளார். ராஜஸ்தானில் சந்தித்த கெலாட் "பிரதமர் மோடி ஒருமுறைக் கூட மணிப்பூருக்குச் செல்லவில்லை. அங்குள்ள நிலவரம் குறித்து எந்தக் கூட்டமும் நடத்தி ஆய்வு மேற்கொள்ளவில்லை. தேர்தலுக்காக கர்நாடகா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களுக்கு சென்ற பிரதமர், மணிப்பூருக்குச் செல்லவில்லை. இவ்வளவுக்கும் மணிப்பூரில் அவர்கள் கட்சி ஆட்சி நடக்கிறது. இதுவே, அங்கு காங்கிரஸ் ஆட்சி நடந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்" என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே மணிப்பூரில் இரண்டு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு இழுத்துச் சென்ற கொடூர சம்பவம் தொடர்பாக அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் அவரது உருவ பொம்மையை எரித்தனர்.
மணிப்பூர் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன: பாஜக: மணிப்பூர் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன என்று பாஜகவின் இளம் தலைவர்களில் ஒருவரும், மத்திய அமைச்சருமான அனுராக் தாக்குர் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “எதிர்க்கட்சிகள் ஆளும் ராஜஸ்தான், மேற்கு வங்கம், பிஹார் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான கொடூரக் குற்றங்கள் மிகப் பெரிய எண்ணிக்கையில் நடந்துள்ளன. ஆனால், எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்தக் குற்றங்கள் விஷயத்தில் அமைதி காக்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.
மகாராஷ்டிர நிலச்சரிவு உயிரிழப்பு 26 ஆக அதிகரிப்பு: மகாராஷ்டிராவின் ரெய்காட் மாவட்டத்தில் உள்ள இர்ஷல்வாடி கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் 82 பேர் நிலச்சரிவில் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால், மீட்புப் பணிகள் 3-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வந்தது.
வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை குறையும்: மத்திய அரசு: மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் இருந்து வரத்து அதிகரிப்பதால் வரும் காலங்களில் தக்காளி விலை குறையும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே நாடு முழுவதும் பரவலாக தக்காளி விலை கடுமையாக அதிகரித்து வருகிறது. பருவமழை, கர்நாடக மாநிலம் கோலாரில் தக்காளி பயிர்களை பாதித்த ஒயிட் ஃப்ளை நோய் மற்றும் இன்னபிற காரணங்களால் விலை தொடர்ச்சியாக ஏறி வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் வெப்ப அலை மரணங்கள் அதிகரிப்பு: இந்த ஆண்டு வெப்ப அலை காரணமாக, இந்தியாவில் 264 பேர் மரணம் அடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு அளித்த பதில் மூலம் தெரியவந்துள்ளது. இதில் அதிபட்சமாக கேரளாவில் 120 பேர், குஜராத்தில் 35 பேர், தெலங்கானாவில் 20 பேர் மரணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் வெப்ப அலையால் இந்த ஆண்டு 12 பேர் மரணம் அடைந்தனர். 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மரணங்களில் எண்ணிக்கை உச்சத்தை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் தடையால் அமெரிக்காவில் அரிசி தட்டுப்பாடு: பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ள நிலையில், அமெரிக்காவில் சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட கடைகளில் அரிசிப் பைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஒவ்வொரு நபரும் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட உச்சபட்ச அளவில் அரிசியை வாங்கி வைத்துக் கொள்ள் முனைப்பு காட்டுவதாகத் தெரிகிறது.