Last Updated : 22 Jul, 2023 01:13 PM

1  

Published : 22 Jul 2023 01:13 PM
Last Updated : 22 Jul 2023 01:13 PM

இலங்கை அரசால் இந்த ஆண்டு மட்டும் 74 இந்திய மீனவர்கள் கைது: மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: இலங்கை அரசால் இந்த ஆண்டில் மட்டும் 74 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி எழுப்பிய கேள்விக்கான பதிலில் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

வெளிநாட்டுச் சிறைகளில் தவிக்கும் இந்திய மீனவர்களின் எண்ணிக்கை மற்றும் நிலை குறித்து திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழு துணைத் தலைவருமான கனிமொழி மக்களவையில் வெளியுறவுத் துறை அமைச்சரிடம் எழுத்துபூர்வமாக சில கேள்விகளை எழுப்பினார். தனது கேள்வியில் தூத்துக்குடி எம்.பி.,யான கனிமொழி, ”இந்திய மீனவர்கள் ஈரான், இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டுக் கடற்படைகளால் சர்வதேச கடல் எல்லையை மீறியதாக கைது செய்யப்பட்டதையும், தாக்கப்பட்டதையும் அரசு அறிந்திருக்கிறதா?

கடந்த 3 ஆண்டுகளில் வெளிநாட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்ட, வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் எண்ணிக்கை என்ன? நாடு வாரியாக இந்த விவரம் என்ன? வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகம் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு சட்ட- நீதித்துறை செயல்முறைகளின்படி உதவி செய்கிறதா? வெளிநாட்டுச் சிறைகளில் இருக்கும் நமது மீனவர்களை விடுவிப்பதற்காக அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய விவரங்கள் என்ன?” என கேள்விகளை எழுப்பியிருந்தார்.

இதேபோன்ற கேள்விகளை கனிமொழி எம்.பி.யோடு அடூர் பிரகாஷ், ராஜேஷ்பாய் சௌதசமா ஆகிய எம்.பி.,க்களும் எழுத்துபூர்வமாக எழுப்பியிருந்தனர். இவர்களது கேள்விகளுக்கானப் பதிலை வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.முரளிதரன் வெள்ளிக்கிழமை மக்களவையில் தெரிவித்தார். தனது எழுத்துபூர்வமான பதிலில் மத்திய இணை அமைச்சரான வி.முரளிதரன் கூறியதாவது: இந்திய மீனவர்கள் வெளிநாடுகளில் கைது செய்யப்படுவதாகவும், இந்திய மீனவர்களின் மீன் பிடிப் படகுகள் கைப்பற்றப்படுவதாகவும் அரசுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

ஈரானைப் பொறுத்தவரை, தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகத்திடம் 2023-ஆம் ஆண்டில் இதுவரை 15 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இலங்கையைப் பொறுத்தமட்டில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 74 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று தகவல்கள் வந்துள்ளன.

இந்திய வெளியுறவு அமைச்சகத்திடம் உள்ள தகவல்களின்படி, 2020- 22 ஆகிய மூன்று ஆண்டுகளில் ஈரான் நாட்டில் 27 இந்திய மீனவர்களும், இலங்கையில் 501 இந்திய மீனவர்களும், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 5 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், பங்களாதேஷில் 309 இந்திய மீனவர்கள், பஹ்ரைன் 12, மியன்மார் 19, பாகிஸ்தான் 1060, கத்தார் 54, சவுதி அரேபியா 564, செஷல்ஸ் 61 என இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இதுபோல், 2020 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் வெளிநாடுகளில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 2,612 ஆக இருக்கிறது. அதேநேரம் இந்த அரசு இந்திய மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு அதிக முன்னுரிமை அளிக்கிறது. இந்திய மீனவர்கள் கைது மற்றும் அவர்களின் மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட தகவல்கள் கிடைத்த உடனேயே சம்பந்தப்பட்ட இந்திய தூதரகங்கள் அந்தந்த நாடுகளின் தூதரங்களை விரைந்து அணுகி, இந்திய மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்திய தூதரக அதிகாரிகள் வெளிநாடுகளில் இந்திய மீனவர்கள் சிறை வைக்கப்பட்ட அல்லது தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட நிலையில் அந்த இடங்களுக்கு நேரடியாக சென்று அங்கே இந்திய மீனவர்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்கின்றனர். குறிப்பிட்ட சில வழக்குகளில் சட்ட உதவியும் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. அவர்கள் மீதான வழக்கு விசாரணைகளை விரைவில் முடித்து முன்கூட்டியே விடுவிக்கவும், படகுகளை மீட்கவும் தூதரக அதிகாரிகள் தொடர்ந்து உதவுகிறார்கள்.

இந்தப் பிரச்சினையை மீனவர்களின் மனிதாபிமானம் மற்றும் வாழ்வாதாரப் பரிமாணங்களைக் கருத்தில் கொண்டு அரசு பார்க்கிறது. இந்திய மீனவர்களின் பாதுகாப்புக்காக சம்பந்தப்பட்ட நாடுகளோடு இரு தரப்பு ஒத்துழைப்பையும் புரிந்துணர்வையும் உறுதிப்படுத்த வழிமுறைகளையும் அமைத்துள்ளோம்.

இந்திய அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளின் விளைவாக இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 588 இந்திய மீனவர்கள் வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்று வெளியுறவுத் துறை இணை அமைச்சர் பதிலளித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x