Published : 22 Jul 2023 08:03 AM
Last Updated : 22 Jul 2023 08:03 AM
வாரணாசி: உத்தர பிரதேசம், வாரணாசியில் அமைந்துள்ள கியான்வாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த வாரணாசி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலை ஒட்டி கியான்வாபி மசூதி உள்ளது. மசூதி சுவரில் அமைந்துள்ள சிங்கார கவுரி அம்மனை வழிபட அனுமதி கோரி கடந்த 2021-ல் 5 இந்து பெண்கள் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இதனை விசாரித்த நீதிமன்றம், கியான்வாபி மசூதியில் கள ஆய்வு நடத்த உத்தரவிட்டது. இதன்படி மசூதியில் ஆய்வு நடத்தப்பட்டு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் மசூதியின் ஒசுகானாவின் நடுவே சிவலிங்கம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் கியான்வாபி மசூதியில் இந்திய தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டும் என்று கோரி 4 இந்து பெண்கள் சார்பில் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையில் இந்து பெண்கள் சார்பில் கூறும்போது, “ஆதி விஸ்வேஸ்வரரின் கோயில் மீது கியான்வாபி மசூதி கட்டப்பட்டு உள்ளது. இதை உறுதி செய்ய கியான்வாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டும்" என்று வாதிட்டனர்.
கியான்வாபி மசூதி நிர்வாகம் கூறும்போது, “எந்தவொரு வழிபாட்டுத் தலத்தின் மீதும் மசூதி கட்டப்படவில்லை" என்று தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்கள் கடந்த 14-ம் தேதி முடிவடைந்தன. இந்த சூழலில் வாரணாசி மாவட்ட நீதிபதி ஏ.கே.விஸ்வேஷா நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
வாரணாசியின் கியான்வாபி மசூதியில் இந்திய தொல்லியல் துறை அறிவியல்பூர்வமான கள ஆய்வினை நடத்த வேண்டும். ஒசுகானா பகுதியில் மட்டும் ஆய்வு நடத்தக்கூடாது. ஆய்வின்போது மசூதிக்கு எவ்வித சேதமும் ஏற்படக்கூடாது. ஆய்வின்போது தொழுகை நடத்தலாம். ஆகஸ்ட் 4-ம் தேதிக்குள் தொல்லியல் துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT