இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் சமத்துவம், நீதியை நிலைநாட்டுங்கள்: அதிபர் ரணிலிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்

டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கவை நேற்று சந்தித்து பேசிய பிரதமர் மோடி.படம்: பிடிஐ
டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கவை நேற்று சந்தித்து பேசிய பிரதமர் மோடி.படம்: பிடிஐ
Updated on
2 min read

புதுடெல்லி: இலங்கையில் தமிழர் வசிக்கும் பகுதிகளில் சமத்துவம், நீதியை நிலைநாட்டுவதுடன் அமைதிக்கான மீள் கட்டுமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். தமிழர்களின் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்ய வேண்டும் என்று, இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கவிடம் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். இந்தியாவின் யுபிஐ முறையை பின்பற்றுவது உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின

இலங்கையில் நேரிட்ட மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு இலங்கை அதிபர் ரணில் விக்கிரமிங்க, முதல் முறையாக 2 நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ளார்.

கடந்த ஆண்டில் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டும்விதமாக உணவு மற்றும் எரிபொருள் வாங்குவதற்காக4 பில்லியன் டாலர் (ரூ.32,800 கோடி)மதிப்பிலான நிதியுதவியை அந்நாட்டுக்கு இந்தியா வழங்கியது. மேலும், சர்வதேச நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன்டாலர் நிவாரண தொகுப்புகளைபெறுவதற்கான உத்தரவாதத்தையும் இந்தியா அளித்தது.

இந்த சூழ்நிலையில், இந்தியா - இலங்கை இடையிலான தூதரக உறவு 75-வது ஆண்டை எட்டிய நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் வகையில், இலங்கை அதிபரை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.

ரணிலுக்கு மோடி வாழ்த்து: இலங்கை அதிபராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்று ஓராண்டு நிறைவடையும் நிலையில் அவருக்கும், அவரது குழுவினருக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது, பிரதமர் மோடி பேசியதாவது: இலங்கை உடனான இந்தியாவின் உறவு நமது நாகரிகங்களைப் போலவே பழமையானவை, ஆழமானவை. தவிர, அண்டை நாட்டுஉறவுகளுக்கு இந்தியா எப்போதுமே முக்கியத்துவம் அளித்து வருகிறது.

அந்த வகையில் இலங்கைக்கு எப்போதுமே ஒரு சிறப்பிடம் உண்டு. இந்தியா - இலங்கையின் நலன்களும், வளர்ச்சியும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை.

எனவே, பாதுகாப்பு மற்றும்உணர்வுப்பூர்வமான விவகாரங்களில் நாம் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம்.

பொருளாதார கூட்டாண்மை: பொருளாதார கூட்டாண்மைக்கான தொலைநோக்கை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், இரு நாட்டு மக்கள் இடையே கடல், வான், எரிசக்தி தொடர்புகளை வலுப்படுத்த வேண்டும்.

அத்துடன், சுற்றுலா, மின்சாரம், வர்த்தகம், உயர்கல்வி, திறன் மேம்பாடு ஆகியவற்றில் பரஸ்பர ஒத்துழைப்பையும் நாம் அதிகரிக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான பேச்சுவார்த்தையை தொடங்க இருநாட்டு தலைவர்களும் இந்த சந்திப்பின்போது ஒப்புக் கொண்டனர். இதன்மூலம் இரு நாடுகளுக்கு இடையில் புதிய வாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா - இலங்கை இடையே விமான சேவையை மேம்படுத்த இந்த பேச்சுவார்த்தையின்போது ஒப்புக்கொள்ளப்பட்டது. மேலும், தமிழகத்தின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன் துறை இடையே படகு சேவையை தொடங்கவும் முடிவு செய்யப்பட்டது.

யுபிஐ பரிவர்த்தனை: நிதி சேவை நடவடிக்கைகளில் இந்தியாவின் யுபிஐ பரிவர்த்தனை முறையை இலங்கையில் பயன்படுத்திக் கொள்வதற்கான ஒப்பந்தம், இருதரப்பு பேச்சுவார்த்தையின்போது நேற்று கையெழுத்தானது.

இந்தியா - இலங்கை இடையேமின் இணைப்புக்கான கட்டமைப்புகளை விரைவுபடுத்த முடிவு செய்துள்ளதுடன், பெட்ரோலிய குழாய் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆய்வு செய்ய முடிவெடுக்கப்பட்டது.

மீனவர் பிரச்சினை: மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்சினைகளில் இரு நாடுகளும் மனிதாபிமான அணுகுமுறையுடன் செயல்பட வேண்டியது அவசியம் என்று இருதரப்பு பேச்சுவார்த்தையின்போது ஒப்புக்கொள்ளப்பட்டது.

13-வது சட்டத் திருத்தம்: இலங்கையில் 13-வது சட்டத் திருத்தத்தை அமல்படுத்தி மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை இலங்கை அரசு நிறைவற்ற வேண்டும் என்று இலங்கை அதிபருடனான சந்திப்பின்போது பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

இதன்மூலம், தமிழ் சமூகம்மரியாதையுடனும், கண்ணியத்துடனும் வாழ்வதை இலங்கை உறுதி செய்ய வேண்டும். அத்துடன், தமிழர் பகுதிகளில் சமத்துவம், நீதியை நிலைநாட்டுவதுடன் அமைதிக்கான மீள்கட்டுமான நடவடிக்கைகளை இலங்கை முன்னெடுக்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.

ரூ.75 கோடியில் திட்டம்: இந்திய வம்சாவளி தமிழ் சமூகம் இலங்கையில் குடியேறி 200 ஆண்டுகளை நிறைவு செய்யும் இந்த சந்தர்ப்பத்தில்ரூ.75 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்கள் இலங்கையின் இந்திய வம்சாவளி தமிழ் குடிமக்களுக்காக செயல்படுத்தப்படும் என்பதை பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.

இலங்கையின் வடக்கு, கிழக்கு பிராந்தியங்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு இந்தியா தேவையான பங்களிப்பை வழங்கும். நிலையான, பாதுகாப்பான, வளமான இலங்கை என்பது இந்தியாவுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய பெருங்கடல் பிராந்தியத்துக்கே நல்லது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in