Published : 02 Nov 2017 01:32 PM
Last Updated : 02 Nov 2017 01:32 PM

கிச்சடியை தேசிய உணவாக அறிவிக்கவில்லை: மத்திய அமைச்சர் விளக்கம்

இந்தியாவின் தேசிய உணவாக கிச்சடியை விளம்பரப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் அதை மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

டெல்லியில் நாளை நவம்பர் 3-ம் தேதி உணவு கருத்தரங்கு தொடங்குகிறது. இக்கருத்தரங்கு தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது. இந்திய உணவுத் துறையும் சிஐஐ--யும் இணைந்து இந்த விழாவை நடத்துகின்றன.

இதன் ஒரு பகுதியாக நவம்பர் 4-ம் தேதி மாலை, உலக சாதனையில் இடம்பெறும் வகையில் கிச்சடியை அதிகளவில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இத்தகவலானது பல்வேறு ஊடகங்களிலும் செய்தியாக வெளியானது. கிச்சடியை தேசிய உணவாக அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்டது. இதனையடுத்து சமூக வலைதளங்களில் #kichadi ட்ரெண்ட் ஆனது. ஆதரவு, எதிர்ப்புக் கருத்துகளும் குவிந்தன.

இந்நிலையில், இந்தியாவின் தேசிய உணவாக கிச்சடியை விளம்பரப்படுத்த மத்திய அரசு முடிவு செய்யவில்லை. உலக சாதனைக்காகவும், கிச்சடியை சர்வதேச அளவில் பிரபலப்படுத்தவும் மட்டுமே அரசு முடிவு செய்துள்ளது என மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்ஷிம்ரத் கவுர் பாதல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கிச்சடியை தேசிய உணவாக அறிவித்ததாக புனைவுக் கதைகளைக் கிண்டியதுபோதும். உலக சாதனையில் இடம்பெறுவதற்காக மட்டுமே கிச்சடி #WorldFoodIndia நிகழ்வுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

நவம்பர் 4-ம் தேதி பிரபல சமையற்கலை வல்லுநர் சஞ்சீவ் கபூரைக் கொண்டு, 1000 லிட்டர் கொள்ளளவு கொண்ட கடாயில் 800 கிலோ கிச்சடி கிண்ட திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- தி இந்து ஆங்கிலம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x