

கொல்கத்தா: மேற்கு வங்க மாநில கிராமத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் மட்டன், சூப் வாசனையால் யானை கூட்டம் புகுந்தது. இதனால் உறவினர்கள் தப்பியோடினர். மணமக்கள் பைக்கில் தப்பி சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஜர்காம் பகுதி. இங்குள்ள ஜோவல்பங்கா கிராமத்தைச் சேர்ந்தவர் தன்மோய் சிங்கா. இருவருக்கும் மம்பி சிங்கா என்ற பெண்ணுக்கும் கடந்த சனிக்கிழமை திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மேற்கு வங்கத்தில் சமீபத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது.
இதனால் ஒத்திவைக்கப்பட்டிருந்த பல திருமணங்கள் இப்போது ஒவ்வொன்றாக நடத்த கிராமத்தினர் முடிவு செய்திருந்தனர். அதன்படி வெல்டராக இருக்கும் தன்மோய் சிங்கா திருமணம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஏராளமான உறவினர்கள் அங்கு குவிந்தனர்.
திருமண விருந்தாக ஆட்டுக்கறி, இறால், உருளைக் கிழங்கு, காய்கறி சூப் உட்பட பல்வேறு உணவு வகைகள் சமைக்கப்பட்டிருந்தன. உறவினர்கள், நண்பர்கள் விருந்துக்காக திருமணம் நடைபெற்ற பகுதியில் பெரிய கொட்டகை போடப்பட்டிருந்தது. திருமணத்துக்கு வந்திருந்தவர்கள் விருந்துண்ண அமர்ந்த போது திடீரென யானைகள் கூட்டமாக கொட்டகைக்குள் புகுந்தன. அவற்றைப் பார்த்ததும் உறவினர்கள் கூச்சலிட்டுக் கொண்டு தப்பியோடினர். மணமக்களும் பைக்கில் தப்பிச்சென்றனர். இதனால் பதற்றமும் பரபரப்பும் அங்கு நிலவியது.
இதையடுத்து அடுத்தடுத்து நடைபெற இருந்த திருமணங்களும் ஒத்திவைக்கப்பட்டன. யானைகள் கூட்டம் கூட்டமாக திரிவதால், உணவு வாசனைக்கு திருமண நிகழ்ச்சிகளுக்குள் புகுந்து விடுகின்றன. அத்துடன் யானைகள் பயத்தால் திருமணம் நடத்தினால் வரமாட்டோம் என்று உறவினர்களும் நண்பர்களும் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இதனால் பல திருமணங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
ஜர்காம் பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. அவை தனித்தனிக் குழுவாக பிரிந்து கிராமங்களுக்குள் புகுந்துள்ளன. இந்த மாதத்தின் தொடக்கத்தில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்தார். ஜர்காம், ஜோவல் பங்கா கிராமம் தவிர கஜ்லா, குசும்கிராம், ஜோபானி, அதிஷோல், கோலாபானி உட்பட பல கிராமங்களுக்கும் யானைகள் கும்பல் கும்பலமாக அடிக்கடி வந்து நாசம் செய்து விட்டு செல்கின்றன. இதனால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
முன்னதாக பஞ்சாயத்து தேர்தலின் போது கூட வேட்பாளர்கள் பலர், யானைகள் பயத்தால் பிரச்சாரத்துக்கே செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.