டெல்லி டிஇஆர்ஏ தலைவரை உச்ச நீதிமன்றமே நியமிக்கும்: தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வு தகவல்

டெல்லி டிஇஆர்ஏ தலைவரை உச்ச நீதிமன்றமே நியமிக்கும்: தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வு தகவல்
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையர் நியமனத்தில் டெல்லி அரசு மற்றும் துணைநிலை ஆளுநர்இடையே ஒருமித்த கருத்து ஏற்படாத நிலையில், அப்பதவிக்கு தற்காலிக அடிப்படையில் ஒருவரை நியமிக்க உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

டெல்லியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள டெல்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிஇஆர்ஏ) தலைவராக ராஜஸ்தான் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சங்கீத் ராஜ் லோதாவை நியமிக்கும்படி மத்திய அரசுக்கு ஆம் ஆத்மி அரசு பரிந்துரை செய்தது. ஆனால் அப்பதவிக்கு அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி உமேஷ் குமாரை மத்திய அரசு நியமித்தது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி அரசு வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து உமேஷ் குமாரின் பதவியேற்பை உச்ச நீதிமன்றம் தள்ளி வைத்தது.

இந்த விவகாரத்தில் துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவும் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலும் அரசியல் சண்டையை கடந்து, ஒன்றாக அமர்ந்து ஒருமித்த கருத்தை எட்டுமாறு உச்ச நீதிமன்றம் கடந்த திங்கட்கிழமை உத்தரவிட்டது.

இந்நிலையில், இவ்வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, மனோஜ் மிஸ்ரா ஆகியோரை கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது டிஇஆர்ஏ தலைவர் நியமனத்தில் தங்களிடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என இரு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு, “அந்த நிறுவனத்திற்கு என்ன நடந்தாலும் யாரும் கவலைப்படாதது வருத்தம் அளிக்கிறது. நீங்கள் இருவரும் தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அந்த நிறுவனம் தலைவர் இல்லாமல் உள்ளது” என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

அப்போது “டிஇஆர்ஏ தலைவர் பதவிக்கு உச்ச நீதிமன்றம்பெயர்களை பரிந்துரைக்கலாம்” என துணைநிலை ஆளுநர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே, தெரிவித்தார்.

இதற்கு, “டிஇஆர்ஏ தலைவர் பதவிக்கு சிறிது காலத்திற்கு தற்காலிக அடிப்படையில் நாங்களே ஒருவரை நியமிக்கிறோம். இதற்கு நீதிபதிகள் சிலருடன் நாங்கள் கலந்தாலோசிக்க வேண்டும்” என்று தெரிவித்தனர். வழக்கை ஆகஸ்ட் 4-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in