

சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் படுக்கையறையில் இருப்பது போல வெளியான வீடியோ உண்மைதான் என டெல்லி தடயவியல் ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது.
கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு தியான பீடம் ஆசிரமத்தின் சாமியார் நித்யானந்தா, நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கை அறையில் ஆபாசமாக இருப்பது போன்ற வீடியோ ஊடகங்களில் வெளியானது. நித்யானந்தாவின் சீடர் லெனின் கருப்பன் வெளியிட்ட இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து பிடதி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது நித்யானந்தா கூறும்போது, “அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை” என மறுத்தார். மேலும் லெனின் கருப்பனுக்கு எதிராக போலீஸில் புகார் அளித்தார். இதனிடையே நீதிமன்றத்தில் ஆஜரான நடிகை ரஞ்சிதாவும், “வீடியோ பொய்யானது. சிலர் திட்டமிட்டு போலியாக மார்ஃபிங் செய்துள்ளனர்” என்றார்.
இதையடுத்து ராம்நகர் நீதிமன்றம், வீடியோவின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து அறிக்கை அளிக்குமாறு கர்நாடக போலீஸாருக்கு உத்தரவிட்டது. அதன் பேரில் அந்த வீடியோவை ஆய்வு செய்த ஹைதராபாத் தடயவியல் ஆய்வு மையம், வீடியோ உண்மையானதுதான் என தெரிவித்தது.
இதேபோல நித்யானந்தாவின் குரலை ஆராய்ந்த பெங்களூரு சோதனை மையமும், வீடியோவில் பதிவாகி இருக்கும் குரல் நித்யானந்தாவுக்கு சொந்தமானது என கூறியது.
இதை ஆட்சேபித்த நித்யானந்தா தரப்பு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. நீதிமன்ற உத்தரவின் பேரில் நித்யானந்தா - ரஞ்சிதா வீடியோவை ஆராய்ந்த டெல்லி தடயவியல் ஆய்வு மையம், “சர்ச்சைக்குரிய வீடியோ பதிவு உண்மைதான். அதில் இருப்பது நித்யானந்தாவும், ரஞ்சிதாவும் தான்” என உறுதி செய்துள்ளது. இந்த அறிக்கையை பெங்களூரு மாநகர கூடுதல் காவல் ஆணையர் சரண் ரெட்டி நேற்று ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதனால் நித்யானந்தா வழக்கில் மீண்டும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.