Last Updated : 22 Nov, 2017 08:53 AM

 

Published : 22 Nov 2017 08:53 AM
Last Updated : 22 Nov 2017 08:53 AM

இந்திரா இன்னும் ஏன் இந்தியாவை ‘ஆள்கிறார்’?

த்திரிகையாளர் வேலையை ஏன் மிகவும் நேசிக்கிறேன் என்றால், கதை சொல்ல எனக்கு ரொம்பவும் பிடிக்கும். இந்திரா காந்தியின் நூறாவது பிறந்த நாளின்போது சொல்ல என்னிடம் நிறைய கதைகள் இல்லையே என்று வருந்துகிறேன். அவர் மறைந்த போது எனக்கு வயது 27. அவருடைய காலத்தில் மிக முக்கியப் பிரமுகர்களுக்கான பாதுகாப்பில் அவ்வளவு கெடுபிடிகள் இல்லாததால் இரண்டு முறை அருகில் இருந்திருக்கிறேன். 1979 கோடைக்காலத்தில் அவர் பதவியில் இல்லை.

டெல்லியிலிருந்து ஸ்ரீநகருக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்றபோது, சண்டிகர் விமான நிலையத்தில் சில நிமிஷங்கள் கிடைத்தன. அப்போது அவரிடம் சில கேள்விகளைக் கேட்க முடிந்தது. ஞானி ஜைல் சிங், வி.என். திவாரி (முன்னாள் மத்திய அமைச்சர் மணீஷ் திவாரியின் தந்தை) வெகு கவனமாகக் கேட்டுக்கொண்டிருக்க அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.

என்னுடைய அடுத்த சந்திப்பு அவரைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள உதவியது. அசாம் மாநிலத்தின் குவாஹாட்டி நகருக்கு 120 கிலோ மீட்டர் தொலைவில் நெல்லி என்ற இடத்தில், 18.2.1983 காலையில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். அது தேர்தல் காலம். அடுத்த நாள் அந்த இடத்துக்கு ஹெலிகாப்டரில் வந்தார். ஹெலிகாப்டரிலிருந்து துள்ளிக் குதித்து வெளியேறினார். “மூவாயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்; உங்களில் யார் இதற்குப் பொறுப்பேற்கப் போகிறீர்கள்?” என்று குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் இருந்த மாநிலத்தின் தலைமை நிர்வாகியான ஆர்.வி. சுப்பிரமணியத்தைப் பார்த்து கோபத்துடன் கேட்டார். அப்போது சட்டம் - ஒழுங்குக்கான இன்ஸ்பெக்டர் ஜெனரல் கே.பி.எஸ். கில்லும் உடனிருந்தார்.

‘இந்திராவின் வாழ்வில் ஒரு நாள்’ என்றொரு செய்திப்படத்தை சத்யஜித் ராய் தயாரித்தார். கேமராவுக்காக நாற்காலியை சரி செய்வதைப் போலவும், ஒரு புகைப்படத்தை இடம் மாற்றுவது போலவும் செய்யுமாறு சத்யஜித் ராய் கேட்டுக்கொண்டார். அவருடைய தந்தையின் புகைப்படத்தைக் கையில் எடுத்தார் இந்திரா. அதில் நிறைய தூசு படிந்திருந்தது. அதைத் துடைக்க பழைய துணியைத் தேடினார். “உங்கள் புடவைத் தலைப்பால் அதைத் துடையுங்கள், பார்ப்பவர்கள் நெகிழ்ந்துவிடுவார்கள்” என்றார் சத்யஜித் ராய். ‘முடியாது’ என்று மறுத்துவிட்டார் இந்திரா. “ஏன் இந்திராஜி, உங்களுடைய அப்பா மீது உங்களுக்குப் பாசம் இல்லையா” என்று கேட்டார் சத்யஜித் ராய். “நிரம்ப உண்டு, ஆனால் தூசு மீது எனக்குப் பாசம் கிடையாது” என்று பட்டென்று பதிலளித்தார்.

அசாம் பள்ளத்தாக்கில் நான் அவரைப் பார்த்த நாள், அவருடைய வாழ்க்கையின் மிகச் சிறந்த கணங்களில் ஒன்று அல்ல. ஆனால் அப்போது அவர் எடுத்த நடவடிக்கை, துணிச்சலான முடிவுகளை எடுப்பவர் என்ற அவருடைய குணத்துக்கு ஏற்ப அமைந்தது. அசாமில் குடியேறிய வெளிநாட்டவர்களைக் கண்டுபிடித்து வெளியேற்ற வேண்டும் என்ற போராட்டம் அமைதியான முறையில் நான்கு ஆண்டுகளாக நடந்து கொண்டிருந்தது. அசாம் எண்ணெய் வயல்களிலிருந்து கச்சா பெட்ரோலிய எண்ணெயை எடுத்து அனுப்பும் வேலைகூட மக்களுடைய போராட்டத்தால் தடுக்கப்பட்டிருந்தது. குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்தாலும், மாநில நிர்வாகத்தால் கிளர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அரசியல் கட்சிகள் தேர்தலைப் புறக்கணிக்க முடிவெடுத்திருந்தும், சட்டம்-ஒழுங்கைக் கட்டுக்குள் கொண்டுவரத் தேர்தலை நடத்தினார்.

இந்திரா காந்தியை ‘ஊமை பொம்மை’ என்று நாடாளுமன்றத்தில் கேலி செய்தார் ராம் மனோகர் லோகியா. லால் பகதூர் சாஸ்திரியின் திடீர் மறைவால் பிரதமர் பதவியை ஏற்கும் நெருக்கடி இந்திராவுக்கு ஏற்பட்டது. இந்தியா அப்போது அடுத்தடுத்து நடந்த இரண்டு போர்களின் பாதிப்பிலிருந்து (1962 சீனப் படையெடுப்பு, 1965 பாகிஸ்தான் போர்) மீண்டு கொண்டிருந்தது. அரிசி, கோதுமை ஆகிய உணவு தானியங்களுக்குக் கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டது. அவர் பிரதமராகப் பதவியேற்ற சில வாரங்களுக்கெல்லாம் மிஜோ தீவிரவாதிகள் அய்ஜால் நகரைக் கைப்பற்றிவிட்டு மாநிலக் கருவூலத்தையும் அசாம் ரைஃபிள்ஸ் படைப்பிரிவின் பாசறையையும் கைப்பற்றத் தயாராகிவிட்டனர். அதுவரை யாருமே நினைத்துப் பார்த்திருக்காத ஒரு செயலை அவர் மேற்கொண்டார். இந்திய விமானப் படையை அனுப்பி அய்ஜால் நகரில் தீவிரவாதிகளின் இடங்கள் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டார்.

அய்ஜால் மீதான வான் தாக்குதல், வங்கதேசத்தை மீட்க மேற்கு பாகிஸ்தானுடன் கடுமையான போர், 1983-ல் அசாம் சட்டப் பேரவை பொதுத்தேர்தல், ஓராண்டுக்குப் பிறகு பொற்கோவிலில் தங்கியிருந்த காலிஸ்தான் பயங்கரவாதிகளை அங்கிருந்து விரட்ட ராணுவத்தைக் கொண்டு ‘நீலநட்சத்திர நடவடிக்கை’ என்று அனைத்திலும் அரசின் முழு பலத்தையும் பிரயோகித்தார். இந்தச் செயல்கள் அனைத்தும் ஆறாத வடுவை ஏற்படுத்தியிருக்கலாம், ஆனால் நாட்டுக்கு ஏற்படவிருந்த ஆபத்துகள் நிரந்தரமாக நீக்கப்பட்டன. 1983-ல் அசாமில் எண்ணெய் எடுப்பதையும் தேர்தலையும் தடுத்த மாணவர் தலைவர்கள் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது அசாம் உடன்பாட்டில் கையெழுத்திட்டதுடன் இரண்டு முறை மாநிலத்தில் ஆட்சிக்கு வந்ததுடன், அதை இழந்தும்விட்டனர்.

நேருவின் சமத்துவக் கொள்கை மிதமானது. அவர் காலத்திய லட்சியங்களுக்கு ஏற்ற முற்போக்குக் கொள்கைகளைப் பின்பற்றினார். இந்திரா காந்தி எதிலும் குறை காண்பவர். சமத்துவக் கொள்கையைக் கையாள முற்பட்டு காங்கிரஸ் கட்சியையே இரண்டாக உடைத்தார். வங்கி, நிலக்கரி, பெட்ரோலியம், இன்சூரன்ஸ் என்று ஒவ்வொரு துறையாக நாட்டுடமையாக்கினார்.

அரசியல் சட்டத்தின் முகப்புரையில் ‘சோஷலிஸ்ட்’ என்ற வார்த்தையை, அரசியல் சட்டத்துக்கு முரணாக ஆறாவது ஆண்டாக நீட்டிக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் தீர்மானமாக இயற்றி சேர்த்தார். நெருக்கடி நிலை அமலில் இருந்தபோது சேர்த்த அந்த ‘சோஷலிஸ்ட்’ என்ற வார்த்தையை நீக்கும் துணிவு, அவருக்குப் பின் பிரதமராக வந்த எந்தத் தலைவருக்கும் ஏற்படவில்லை.

வங்கிகளை தேசியமயமாக்கிய இந்திராவின் நடவடிக்கையை ரத்து செய்யாமல், தேசிய வங்கிகளின் மீட்சிக்கு 2.11 லட்சம் கோடியை மறு முதலீடாக அளிக்கிறார் பிரதமர் மோடி. வாஜ்பாயின் பொருளாதாரத்தைவிட இந்திராவின் பொருளாதாரம்தான் மோடியை அதிகம் ஈர்த்திருக்கிறது!

நாடு முழுவதையும் காங்கிரஸ்தான் ஆள வேண்டும், எதிர்க்கட்சிகள் நசுக்கப்பட வேண்டும் என்றே விரும்பினார் இந்திரா. .

தமிழில்: ஜூரி

சேகர் குப்தா, ‘தி பிரின்ட்’ தலைவர்

முதன்மை ஆசிரியர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x