மணிப்பூரில் பெண்கள் மீதான கொடூர வன்முறை முதல் பிரதமர் கண்டனம் வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ ஜூலை 20, 2023

மணிப்பூரில் பெண்கள் மீதான கொடூர வன்முறை முதல் பிரதமர் கண்டனம் வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ ஜூலை 20, 2023
Updated on
2 min read

மணிப்பூரில் பெண்கள் மீதான கொடூர வன்முறை: மணிப்பூர் மாநிலத்தில் குகி பழங்குடியினத்தை சேர்ந்த இரண்டு பெண்களை மைதேயி சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் கும்பல் ஒன்று சேர்ந்து நிர்வாணப்படுத்தி வீதியில் ஊர்வலமாக அழைத்து சென்ற கொடூரமான வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த இரண்டு பெண்களில் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கும் ஆளாகியுள்ளார்.

நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவம் கடந்த மே மாதம் 4-ம் தேதி மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் உள்ள பைனோம் கிராமத்தில் நிகழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மே 18-ம் தேதி அன்று காங்போக்பி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, அந்த வீடியோ வெளியான நிலையில், நாடு தழுவிய அளவில் பெரும் அதிர்வலை ஏற்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் அளித்த பேட்டியில், "கொலைவெறியுடன் எங்கள் கிராமத்துக்குள் ஒரு கும்பல் புகுந்தது. அந்த கும்பலில் போலீசாரும் இருந்தார்கள். அவர்கள்தான் எங்களை அந்த கும்பலிடம் பிடித்துக் கொடுத்தார்கள்" என்று தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மணிப்பூர் கொடூர வன்முறையில் ஈடுபட்ட முக்கிய நபர் கைது: மணிப்பூர் சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய நபர் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில், ஹிராதாஸ் என்ற 32 வயது நபர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கடத்தல், பாலியல் வன்கொடுமை, கொலை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், வீடியோவில் உள்ள பிற நபர்களைப் பிடிக்க 12 குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் மணிப்பூர் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, "குற்றவாளிகளுக்கு எதிராக மரண தண்டனை கிடைக்கும் வகையில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறுகிறேன். இதுபோன்ற கொடூரமான செயல்களுக்கு நமது சமூகத்தில் இடம் இல்லை என்பதை புரிந்து கொள்ளவேண்டும்" என்று மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.

“மணிப்பூரின் மகள்களுக்கு நடந்தது மன்னிக்க முடியாதது” - பிரதமர்: மணிப்பூர் சம்பவம் குறித்து பிரதமர் மோடி தனது வேதனையையும் கோபத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். நாடாளுமன்ற கூட்டுத் தொடர் தொடங்கும் முன்பாக பேசிய பிரதமர் மோடி, "மணிப்பூரில் நடந்துள்ள சம்பவம் நாகரிக சமூகத்துக்கான அவமானம். இதற்காக நாடு வெட்கப்படுகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது நடவடிக்கை எடுக்க கடுமையான சட்டங்களை இயற்றும்படி நான் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்.

இந்தச் சம்பவம் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மணிப்பூர் எங்கு வேண்டுமானாலும் நடந்திருக்கலாம், குற்றவாளிகள் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் தப்பக் கூடாது. நான் நாட்டுக்கு உறுதியளிக்கிறேன். சட்டம் அதன் முழு பலத்துடன் தனது கடமையைச் செய்யும். மணிப்பூரின் மகள்களுக்கு நடந்தது மன்னிக்க முடியாதது" என்று பிரதமர் மோடி தெரிவித்தார். இந்தக் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி தற்போதுதான் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

“அரசு தவறினால், நாங்களே நடவடிக்கை எடுப்போம்” - உச்ச நீதிமன்றம்: மணிப்பூர் சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், “அரசு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், நாங்களே நடவடிக்கை எடுப்போம்” என்று கொந்தளிப்புடன் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, விரோதத்தை தீர்த்துக்கொள்ள பெண்களை வன்முறையின் கருவியாக பயன்படுத்தப்படுவது அரசியலமைப்பு ஜனநாயகத்தால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாத மனித உரிமை மீறல்” என்று தெரிவித்துள்ளது.

மணிப்பூரில் கண்டனப் பேரணியில் குவிந்த மக்கள்: மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட கொடூர வன்முறைச் சம்பவத்தைக் கண்டித்தும், நீதி கேட்டும் அம்மாநிலத்தின் சூர்சந்த்பூர் வீதிகளில் நூற்றுக்கணக்கான பழங்குடியினர் வியாழக்கிழமை கண்டனப் பேரணி நடத்தினர்.

இதனிடையே, மணிப்பூர் சம்பவத்துக்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு: மணிப்பூர் வன்முறை விவகாரம் காரணமாக, எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளில் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

காவிரி நீர் குறித்து மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்: காவிரியில் தமிழகத்துக்கு உரிய தண்ணீரை கர்நாடகம் திறந்துவிடாததால், தமிழகத்தில் தற்போது குறுவை சாகுபடிக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்தும், உடனடியாக காவிரியிலிருந்து உரிய நீரினை திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டுமென்று கோரியும், மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்துக்கு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய அரசு மீது அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு: "மத்திய அரசு தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில் சில திருத்தங்களையும், விதிகளையும் கொண்டு வந்துள்ளது. அதுகூட, இணையவழி சூதாட்டங்களை நடத்துகின்றவர்களை, பாதுகாக்கக்கூடிய ஒன்றாகத்தான் அமைந்திருக்கிறது. மத்திய அரசுக்கு வருவாயைக் கொண்டு வருவதை குறிக்கோளாக கொண்டுதான் அமைந்திருக்கிறது" என்று தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

“கச்சத்தீவு பற்றி பேச திமுகவுக்கு என்ன தகுதி இருக்கிறது?” - அண்ணாமலை: கச்சத்தீவு விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ள நிலையில், “திமுக பலமுறை, பல கட்சிகளுடன் சந்தர்ப்பவாத கூட்டணியில் இருந்து, மத்திய அரசில் அங்கம் வகித்தபோதும் கச்சத்தீவை மீட்க உறுதியான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கச்சதீவைத் தாரை வார்த்த திமுக கும்பலுக்கு, கச்சத்தீவு பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது?" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார்.

பிரிஜ் பூஷனுக்கு இடைக்கால ஜாமீன்: மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் பிரிஜ் பூஷன் சிங்குக்கு டெல்லி நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in