Published : 20 Jul 2023 07:30 PM
Last Updated : 20 Jul 2023 07:30 PM
புதுடெல்லி: மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைச் சம்பவங்களுக்கு திரைப் பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
“மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை காட்டும் காணொலி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. இதுபோன்ற கேவலமான செயல்களை எந்தச் சூழலிலும் பொறுத்துக் கொள்ள முடியாது என்ற செய்தியை தெரிவிக்க, குற்றவாளிகள் மிகக் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எனது அதீத நம்பிக்கை” - சஞ்சய் தத்.
”மணிப்பூர் சகோதரிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை மனித வரலாற்றில் பேரவலம். மன்னிக்க முடியாத பெருங்குற்றம். கொலை வாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே…” - ஜீவி பிரகாஷ்
”மணிப்பூர் சம்பவத்தால் ஆழ்ந்த வருத்தம் அடைந்துள்ளேன். பாதிக்கப்பட்ட பெண்களுக்காக என் இதயம் துடிக்கிறது. இந்தியாவில் இதுபோன்ற மனிதாபிமானமற்ற செயல்களை நிறுத்துவதற்கு, முன் எப்போதும் இல்லாத கடுமையான தண்டனை அவசியமாகிறது. பாதிக்கப்பட்ட பெண்கள் குணமடைய என் பிரார்த்தனைகள் உடனிருக்கும்” - பிரதீப் ரங்கநாதன்
”மணிப்பூர் பெண்கள் - சமூகம், சமூகம், மனிதநேயம் என அனைத்தும் பல்வேறு நிலைகளில் தோல்வியடைந்தன. இந்தச் செயலை மனிதர்களாகிய நாம் நேர்மையுடன் கண்டிக்க வேண்டும். இது போன்ற பல கொடூரங்களுக்கு இது ஒரு சான்று மட்டுமே. ஊடகங்களை முடக்குவது பிரச்சனையில் உள்ள மக்களுக்கு உதவாது.” - பிரியா பவானிசங்கர்
"மணிப்பூர் காணொலி மிகவும் கவலையளிக்கிறது.. இது மனிதநேயத்துக்கு அவமானம். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என்று நம்புகிறேன். அவ்வாறு இருந்தால் வேறு யாரும் அவ்வாறு செய்ய நினைக்கத் துணிய மாட்டார்கள். அப்பெண்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன்". - ரகுல் ப்ரீத்தி சிங்
"மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வீடியோவைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். இதுபோன்ற கொடூரமான செயலை இனி யாரும் செய்ய நினைக்காத அளவுக்கு குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என நம்புகிறேன்." - அக்ஷய் குமார்
முன்னதாக, மணிப்பூர் மாநிலத்தில் குகி பழங்குடியினத்தை சேர்ந்த இரண்டு பெண்களை மைதேயி சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் கும்பல் ஒன்று சேர்ந்து நிர்வாணப்படுத்தி வீதியில் ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடூரமான வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த இரண்டு பெண்களில் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கும் ஆளாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து கொதித்தெழுந்த பழங்குடியினர் நீதி கேட்டு போராட்டம் நடத்த வீதிகளுக்கு வந்துள்ளனர்.
26 விநாடிகள் ஓடும் அந்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்றவர்களில் முக்கிய நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஹிராதாஸ் (32) என்ற அந்த நபர் வியாழக்கிழமை தௌபால் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டதாகவும், அவர் இந்தச் சம்பவத்தின் பின்னணியில் முக்கிய பங்காற்றியிருக்கலாம் என்றும் மணிப்பூர் போலீஸ் தெரிவித்துள்ளது. மேலும், கைது செய்யப்பட்டவர் மீது கடத்தல், பாலியல் வன்கொடுமை, கொலை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், வீடியோவில் உள்ள பிற நபர்களைப் பிடிக்க 12 குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் மணிப்பூர் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT