பழங்குடியின இளைஞர் முகத்தில் சிறுநீர் கழித்து சித்ரவதை செய்த கும்பல்: ஆந்திராவில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம்

பழங்குடியின இளைஞர் முகத்தில் சிறுநீர் கழித்து சித்ரவதை செய்த கும்பல்: ஆந்திராவில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம்
Updated on
1 min read

ஓங்கோல்: ம.பி.யில் பழங்குடியின இளைஞர் முகத்தில் சிறுநீர் கழிக்கப்பட்ட சம்பவம் அண்மையில் நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அதுபோன்ற மற்றொரு அதிர்ச்சி சம்பவம் ஆந்திராவில் நிகழ்ந்துள்ளது.

மத்தியபிரதேச மாநிலத்தின் சித்தி மாவட்டத்தில் அண்மையில் பழங்குடியின இளைஞரின் முகத்தில் ஒருவர் அலட்சியமாக சிகரெட் புகைத்தபடி சிறுநீர் கழிக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதையடுத்து குற்றம் இழைத்த நபரை தேசிய பாதுகாப்பு சட்டம், எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட கடும் சட்டங்களின் கீழ் ம.பி. அரசு கைது செய்தது. மேலும் பாதிக்கப்பட்ட இளைஞரை ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அழைத்து அவரது பாதங்களை கழுவி சுத்தம் செய்தார்.

இந்நிலையில் ஆந்திர மாநிலத்திலும் அதுபோன்ற அதிர்ச்சிகர சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆந்திர மாநிலத்தின் ஓங்கோலில் பழங்குடியினத்தை சேர்ந்த நவீன், ராமாஞ்சநேயுலு என்கிற ஆஞ்சி ஆகிய இருவரும் திருட்டுத் தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் மீது ஓங்கோல் மற்றும் அதன் சுற்றுப்புற காவல் நிலையங்களில் சில வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், இருவருக்கும் இடையே ஏதோ பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதில் நவீனை அடித்து உதைக்க ஆஞ்சி முடிவு செய்தார். இதன்படி நவீனை மது குடிக்க வைத்து ஓங்கோல் ரிம்ஸ் அரசு மருத்துவமனைக்கு பின்புறம் ஆஞ்சி அழைத்து வந்தார். அங்கு ஆஞ்சியும் அவரது நண்பர்கள் 9 பேரும் சேர்ந்து நவீனை ரத்தம் வரும்படி அடித்து உதைத்தனர். பிறகு நவீன் முகத்தில் 3 பேர் சிறுநீர் கழித்தனர். இதனை அந்த கும்பலில் ஒருவர் செல்போனில் படம் பிடித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய கும்பலை போலீஸார் விரைந்து கைது செய்ய வேண்டும், இல்லையேல் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்துவோம் என பழங்குடியினர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். ம.பி.யை போல கடுமையான சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in