

தனது வீட்டில் ஒட்டுக்கேட்புக் கருவி பொருத்தப்பட்டிருந்ததாக எழுந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் இன்று நாடாளுமன்றத்திற்கு வெளியில் செய்தியாளர்களை சந்தித்த நிதின் கட்கரி, "நீங்கள் திரையில் காண்பிக்கும் விஷயங்களிலும், எழுதும் விஷயங்களிலும் அடிப்படை ஆதாரம் இல்லை. இதை நான் பலமுறை உங்கள் மத்தியில் தெளிவுபடுத்திவிட்டேன்.
முதலில், ஒட்டுக்கேட்பு உபகரணம் எனது மும்பை வீட்டில் இருந்ததாக கூறப்பட்டது. பின்னர், எனது டெல்லி வீட்டிலேயே ஒட்டுகேட்பு உபகரணம் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. எவ்வளவு குழப்பம். இந்த குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையும் இல்லை" என்றார்.
முன்னதாக, இன்று காலை மாநிலங்களவை தொடங்கியவுடனேயே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சி எம்.பி.க்கள் கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு அமைச்சர் வீட்டில் ஒட்டுக்கேட்பு உபகரணம் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து விவாதிக்க வேண்டுமென வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர்.