உத்தராகண்ட் இடைத்தேர்தல் வெற்றிக்கு சோனியா நன்றி

உத்தராகண்ட் இடைத்தேர்தல் வெற்றிக்கு சோனியா நன்றி
Updated on
1 min read

உத்தராகண்டில் காலியாக இருந்த 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த வெற்றிக்காக மாநில மக்களுக்கு நன்றி தெரிவித் திருக்கிறார் கட்சித் தலைவர் சோனியா காந்தி.

தேர்தல் முடிவு பற்றி சோனியா காந்தி வெளியிட்ட கருத்து உத்தராகண்ட் அரசு சார்பில் டேராடூனில் சனிக்கிழமை வெளியிடப்பட்டது.

‘காங்கிரஸ் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் அதன் மீது மக்கள் திரும்பி உள்ளனர். மத்தியில் அமைந்துள்ள பாஜக அரசு, சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்பதே இந்த இடைத்தேர்தல் முடிவு காட்டுகிறது. இது நாடு முழுவதும் எதிரொலிக்கும்’ என சோனியா காந்தி தெரிவித் திருக்கிறார்.

சோனியா காந்தியை அவரது இல்லத்தில் உத்தராகண்ட் முதல்வர் ஹரீஷ் ராவத் உள்ளிட்ட வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர்கள் ஹிரா சிங் பிஷ்ட், ரேகா ஆர்யா, மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கிஷோர் உபாத்யாய ஆகியோர் சந்தித்தனர். அப்போது இடைத்தேர்தல் முடிவு பற்றி தனது கருத்தை சோனியா வெளியிட்டார் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றி பெற்ற முதல்வர் உட்பட கட்சியின் வேட்பாளர்களை பாராட்டிய சோனியா காந்தி, மாநில மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற கடுமையாக பாடுபடும்படி கேட்டுக்கொண்டார்.

இடைத் தேர்தலில் ஒரு தொகுதியை தக்க வைத்துக் கொண்ட காங்கிரஸ், இரு தொகுதி களை பாஜகவிடம் இருந்து கைப்பற்றியது. உத்தரா கண்ட் இடைத் தேர்தலில் காங்கிரஸுக்கு கிடைத்த வெற்றி மாநில அரசு நிலைத்து நிற்பதற்கும், கட்சித் தொண்டர்களுக்கு மனோபலம் தரவும் உதவும் என்று உத்தராகண்ட் காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் சூர்ய காந்த் தஸ்மானா சனிக்கிழமை தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்து தொய்வு அடைந்த கட்சித்தொண்டர்களை உற்சாகப்படுத்தவும் அடுத்து நடைபெற உள்ள மகாராஷ்டிரம், ஜம்மு காஷ்மீர் மாநில சட்டமன்ற தேர்தலை நம்பிக்கையுடன் எதிர்கொண்டு வெற்றியை பெறவும் இந்த வெற்றி துணை நிற்கும் என்றும் அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in