

புதுடெல்லி: ராம் விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்), பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தது.
முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராம் விலாஸ் பாஸ்வானின் மறைவை அடுத்து, அவரது கட்சியான லோக் ஜனசக்தி கட்சி இரண்டாக உடைந்தது. ராம் விலாஸ் பாஸ்வானின் தம்பியான பசுபதி குமார் பரஸ், ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சி என்ற பெயரிலும், ராம் விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான் லோக் ஜனசக்தி கட்சி(ராம் விலாஸ்) என்ற பெயரிலும் தனித்தனியாக கட்சி நடத்தி வருகிறார்கள். பாஜக உடன் கூட்டணி அமைத்த பசுபதி குமார் பரஸ், தற்போது மத்திய அமைச்சராக உள்ளார். எந்தக் கூட்டணியிலும் இல்லாமல் சிராக் பாஸ்வான் இயங்கி வந்தார்.
இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோரைச் சந்தித்த சிராக் பாஸ்வான், இதன் தொடர்ச்சியாக, தங்கள் கட்சி பாஜக கூட்டணியில் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று (ஜூலை 18) செய்தியாளர்களிடம் பேசிய சிராக் பாஸ்வான் கூறும்போது, "எங்கள் கட்சிக்கு இருக்கும் கவலை குறித்து பாஜக தலைவர்களிடம் பேசினேன். அவர்கள் நேர்மறையான பதிலை அளித்துள்ளனர். இதனையடுத்து, எங்கள் கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளது. வரும் மக்களவைத் தேர்தலில் எங்கள் கூட்டணி பிஹாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்" என தெரிவித்தார்.
எனினும், அமித் ஷா மற்றும் ஜே.பி. நட்டா உள்ளிட்ட பாஜக தலைவர்களுடன் அவர் நடத்திய பேச்சுவார்த்தைகளின் விவரங்களைத் தெரிவிக்க மறுத்துவிட்டார். அதேநேரத்தில், தனது சித்தப்பாவும், மத்திய அமைச்சருமான பசுபதி குமார் பராஸ் தற்போது பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களவைத் தொகுதியான ஹாஜிபூரில் தனது கட்சி போட்டியிடும் என்றும் சிராக் பாஸ்வான் தெரிவித்தார். மேலும், 2025-இல் பிஹார் சட்டமன்றத் தேர்தலிலும் தங்கள் கட்சி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து போட்டியிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.