Published : 18 Jul 2023 12:51 PM
Last Updated : 18 Jul 2023 12:51 PM

எதிர்க்கட்சிகள் கூட்டம் @ பெங்களூரு | யுபிஏ-க்கு மாற்றாக 4 பெயர்கள் பரிந்துரை: சோனியா காந்தி இறுதி முடிவு

பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் கூட்டம்

பெங்களூரு: 2024 மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜகவை தோற்கடிக்க காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள முடிவெடுத்துள்ள நிலையில், ஏற்கெனவே இருந்த யுபிஏ (UPA) ‘ஐக்கிய முற்போக்குக் கூட்டணி’ என்ற பெயருக்குப் பதிலாக 4 புதிய பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இறுதி முடிவை எடுப்பார் என்று கூறப்படுகிறது.

2004-ல் உருவான யுபிஏ: ஐக்கிய முற்போக்கு கூட்டணி கடந்த 2004-ஆம் ஆண்டு உருவானது. இதில் காங்கிரஸ் தலைமையில் இடதுசாரிகள், மைய அரசியல் சார்பு கட்சிகள் இணைந்தன. அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்தியே ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவராகவும் ஆனார். ஐக்கிய மதச்சார்பற்ற கூட்டணி ‘United Secular Alliance’, முற்போக்கு மதச்சார்பற்ற கூட்டணி ‘Progressive Secular Alliance’ போன்ற பெயர்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்ற பெயர் இறுதி செய்யப்பட்டது. 'முற்போக்கு கூட்டணி' என்ற வார்த்தைகள் இடம்பெற வேண்டும் என்று அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியதும், அதை காங்கிரஸ் ஏற்றுக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்தக் கூட்டணியில் 10-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் இருந்தன. ஆரம்பத்தில் சிபிஐ, சிபிஎம், பார்வர்டு பிளாக் போன்ற இடது சாரிகள் ஐமுகூ க்கு வெளியிலிருந்து ஆதரவு வழங்கினர். அதேபோன்று கூட்டணியில் இல்லாவிட்டாலும் சிறு கட்சிகளும் வெளியிலிருந்து ஆதரவு வழங்கின. அதில் சமாஜ்வாதி கட்சி, மதச்சார்பற்ற ஜனதா தளம், பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை நம்பிக்கை வாக்கெடுப்புகள் வந்தால் ஆதரவு வழங்குவதாக தெரிவித்திருந்தன. எனினும் இக்கட்சிகள் அரசின் அங்கமாக இருக்கவில்லை.

வீழ்ச்சி கண்ட யுபிஏ: 2004-ல் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் யுபிஏ கூட்டணி ஆட்சி அமைந்தது. ஆனால் 2006-ல் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி கூட்டணியில் இருந்து வெளியேறியது. 2007-ல் வைகோவின் மதிமுக வெளியேறியது. 2008-ல் மட்டும் 4 கட்சிகள் வெளியேறின. 2009-ல் பாமக வெளியேறி அதிமுகவில் இணைந்தது. ஜம்மு காஷ்மீரின் பிடிபி கட்சியும் காங்கிரஸுடனான கூட்டணியை முறித்துக் கொண்டது.

2009-ல் மீண்டும் ஐமு கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் 206 இடங்களைக் கைப்பற்றியிருந்தது. அப்போது இடதுசாரிகள், காங்கிரஸை ஆதரிக்கவில்லை. 2012-ல் திரிணமூல் காங்கிரஸ் மற்றும் திமுக வெளியேறியது. அதேபோல் ஜார்க்கண்டின் ஜெவிஎம் - பி கட்சியும் வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

கவனம் ஈர்த்த மம்தாவின் விமர்சனம்: கடந்த ஆண்டு பிற்பாதியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி அனைத்து மாநிலத் தலைவர்களையும் சந்தித்தார். அந்த வகையில் 2021 டிசம்பரில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரை மம்தா பானர்ஜி சந்தித்தார். அப்போது அவர் இரண்டு முக்கிய கருத்துகளை முன்வைத்தார். ஒன்று, பாஜகவை வெற்றிகாண எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று அவர் கூறியது. இன்னொன்று, ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்றால் என்ன என்று அவர் கேள்வி எழுப்பியது. இது தேசிய அரசியலில் கவனம் பெற்றது. 2024 மக்களவைத் தேர்தலை எதிர்க்கட்சிகள் யுபிஏ தலைமையில் எதிர்கொள்ள ஒப்புக் கொள்ளுமா என்ற வாத விவாதங்கள் எழுந்தன.

புதிய பெயருடன் புதுப்பொலிவு பெறுமா? - இந்நிலையில், 2024 மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜகவை தோற்கடிக்க காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள முடிவெடுத்துள்ளன. முதல் கூட்டம் பிஹாரில் நடைபெற்றபோது 17 கட்சிகளே கலந்து கொண்ட நிலையில் பெங்களூரு கூட்டத்தில் 26 கட்சிகள் இணைந்துள்ளன. இரண்டாம் நாளான இன்று எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு இடையே இருக்கும் வேற்றுமைகளை களைந்து பொது செயல் திட்டம் உருவாக்குவது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. பொது வேட்பாளர், கூட்டணியின் பெயர் உள்ளிட்ட விவகாரங்கள் விவாதிக்கப்படுகிறது.

கூட்டணிக்காக 4 புதிய பெயர்கள் யுபிஏ தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று கூட்டம் முடிவுறும்போது அது பற்றிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிக கட்சிகளுடன், புதிய பெயருடன் இந்தக் கூட்டணி புதுப் பொலிவு பெறுமா என்று எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x