Published : 18 Jul 2023 06:37 AM
Last Updated : 18 Jul 2023 06:37 AM
புதுடெல்லி: மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் உட்பட 11 மாநிலங்களவை எம்பிக்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
மேற்குவங்கத்தில் 7, குஜராத்தில் 3, கோவாவில் ஓரிடம் என 11 மாநிலங்களவை எம்பி பதவிகளுக்கு ஜூலை 24-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் 11 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மேற்குவங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன், சுகேந்து சேகர் ராய், டோலா சென், சாகேத்கோகலே, சம்ரூல் இஸ்லாம், பிரகாஷ் பாரிக் ஆகியோரும் பாஜகவை சேர்ந்தமூத்த தலைவர் ஆனந்த் மகாராஜும் போட்டியின்றி மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
குஜராத்தில் இருந்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அந்த மாநிலத்தில் இருந்து பாஜகவை சேர்ந்த ஜேசங்பாய் தேசாய், கேசரிவேவ் சிங் ஜாலா ஆகியோரும் எம்பிக்களாகி உள்ளனர். கோவாவில் இருந்து பாஜக மூத்த தலைவர் சதானந்த் ஷெட் தனவாடே எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஒட்டுமொத்தமாக திரிணமூல் காங்கிரஸை சேர்ந்த 6 பேரும் பாஜகவை சேர்ந்த 5 பேரும் மாநிலங்களவை எம்பிக்களாகி உள்ளனர். மாநிலங்களவையில் மொத்தம் 245 இடங்கள் உள்ளன. இதில் பாஜகவின் பலம் 93 ஆக உயர்ந்துள்ளது. பாஜக கூட்டணியின் பலம் 105 ஆக அதிகரித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரை யூனியன் பிரதேசமாக மத்திய அரசு அறிவித்த பிறகு அங்கு சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறவில்லை. இதனால் எம்எல்ஏ.க்கள் இல்லாததால், அந்த யூனியன் பிரதேசத்தில் மாநிலங்களவை எம்.பி.க்களின் இடத்தை நிரப்ப இயலாது. இங்குதேர்தல் நடைபெற்றால் எம்எல்ஏ.க்களின் எண்ணிக்கை அடிப்படையில் மாநிலங்களவை எம்.பி.க்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT