

குவாஹாட்டி: அசாமில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக வெள்ளம் புகுந்துள்ளது. 13 மாவட்டங்களில் உள்ள 371 கிராமங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக 98,840 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பாதுகாப்பாக முகாம்களில் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகங்கள் செய்து வருகின்றன.
ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களுக்கு பெயர் பெற்ற யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான காசிரங்கா தேசிய பூங்காவை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் வன விலங்குகளை காக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.