Last Updated : 15 Nov, 2017 08:32 AM

 

Published : 15 Nov 2017 08:32 AM
Last Updated : 15 Nov 2017 08:32 AM

காற்று மாசை அகற்ற பயனுள்ள நடவடிக்கைகள் அவசியம்

ங்கள் வீட்டில் ‘டெட்டி’ என்ற பெயரில் வளர்ப்பு நாய் இருந்தது. உணவுக்காக அது வேட்டையாட வேண்டாம், வேளைக்கு உணவு தந்துவிடுவோம். ஒரு நாள் சுண்டெலி ஒன்று சமையலறைக்குள் நுழைவதை அது பார்த்துவிட்டது. உடனே விரட்டியது. அஞ்சி நடுங்கிய சுண்டெலி காஸ் சிலிண்டர்களுக்கு இடையில் நுழைந்தது. டெட்டி அதை வாயில் கவ்விவிட்டது. எங்களைத் தருமசங்கடத்தில் ஆழ்த்தாமல் அதை உயிரோடு விட்டுவிட்டது. வீட்டுக்கு விருந்தினர்கள் வந்தால் நாங்கள் உடனே ‘அதோ பார் சுண்டெலி’ என்று கூறுவதைப்போல ‘சூஹா’ என்போம். உடனே டெட்டி பாய்ந்தோடிச் சென்று காஸ் சிலிண்டருக்கு அருகில் போய் தேடும். அந்த எலி எப்போதும் அங்கேயேதான் இருக்கும் என்பதைப் போல!

டெல்லியை ஆட்சி செய்யும் ஆஆக (ஆம் ஆத்மி கட்சி) அரசும் டெட்டியைப் போலத்தான் நடந்துகொள்கிறது. தலைநகரில் காற்றில் மாசின் அளவு அதிகரித்து, நெருக்கடி நிலை அறிவிக்கும் கட்டம் வந்துவிட்டது. இப்போதும் ஆஆக, முன்பு அமல் செய்த, ‘ஒற்றைப்படை எண் வாகனங்களுக்கு ஒரு நாள்’ - ‘இரட்டைப்படை எண் வாகனங்களுக்கு இன்னொரு நாள்’ அனுமதி என்று அறிவித்திருக்கிறது. இதனால் காற்றின் மாசு சிறிதளவும் குறையவில்லை என்று தரவுகள் தெரிவித்த பிறகும் தானும் நடவடிக்கை எடுத்துவிட்டதாக அரசியல் அரங்கில் சொல்லிக்கொள்ள இப்படி அறிவித்திருக்கிறது. இந்த ஆண்டு தீபாவளிக்கு பட்டாசு விற்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றமே தடை விதித்திருந்தது. அப்படியும் காற்று தூய்மையடைந்துவிடவில்லை.

காற்று மாசுக்குக் காரணம் பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் நெல் அறுவடைக்குப் பிறகு தாள் கற்றைகளை விவசாயிகள் தீயிட்டு அழிப்பதுதான். மாதத்துக்கு ரூ.5,000 என்று விவசாயிகளுக்குக் கொடுத்தால் அவர்கள் தாள் கற்றைகளைக் கொளுத்தாமல் அறுத்துத் தருவார்கள் என்று பஞ்சாப் ஆஆக தலைவர் சுக்பால் சிங் கைரா கூறியிருக்கிறார். இதையடுத்து பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்கைச் சந்திக்கப் போவதாக தில்லி முதல்வர் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

டெல்லி மட்டுமல்ல, நாடு முழுவதுமே பாதிக்கப்பட்டிருக்கிறது. அதிக அதிகாரம் படைத்தவர்கள் வாழும் நகரம் டெல்லி. அவர்களைப் பாதிக்கும் பிரச்சினைக்கே அவர்களால் தீர்வு காண முடியவில்லை என்றால் நாட்டின் இதர பகுதிகளில் காற்றில், நீரில், ஆறுகளில், வனங்களில், ஏரிகளில், மலைகளில் ஏற்படும் மாசுகளுக்கு எப்படி அவர்கள் தீர்வு காண முடியும்?

தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) டெல்லியில் இருக்கிறது. டெல்லி தொடர்பாக அது பரிந்துரைக்கும் பரிகார நடவடிக்கைகளைப் பார்க்கும்போது அதை டெல்லிக்கான பசுமைத் தீர்ப்பாயம் என்றே கூறிவிடலாம்! டெல்லியில் தங்களுடைய கோரிக்கைகளுக்காகப் போராடுகிறவர்களுக்கு ஜந்தர் மந்தரில் இனி இடம் ஒதுக்க வேண்டாம், நகருக்கு வெளியே இடம் கொடுங்கள் என்று அது ஆணையிட்டிருக்கிறது. ஆட்சியில் இருப்பவர்களின் காதில் விழட்டும் என்றுதான் தலைநகருக்கு வந்து போராடுகிறார்கள்.

இப்போது தீர்ப்பாயம் தடை விதித்திருப்பது டெல்லி மாநகருக்குள் இனி கட்டட வேலையே நடக்கக்கூடாது என்று; சூழல் மாசைக் கட்டுப்படுத்த கட்டுமான வேலைகளை நிறுத்தினால்தானே முடியும்! கட்டுமான வேலை நின்றுவிட்டால் தொழிலாளர்கள் என்ன ஆவார்கள் என்ற கேள்வி எழுகிறதல்லவா?

தேசிய மனித உரிமைகள் ஆணையம் கூட இதில் தலையிட்டிருக்கிறது. அடுத்தது, நீண்டகாலமாக நிலைத்திருக்கும் பூரே லால் கமிட்டி; இது உச்ச நீதிமன்றத்தால் ஏற்படுத்தப்பட்டு இதுவரை 17 உச்ச நீதிமன்ற நீதிபதிகளைப் பார்த்துவிட்டது. முதலிலேயே நல்ல மாறுதலை இந்தக் குழுவின் பரிந்துரை ஏற்படுத்தியது. டெல்லி மாநகரப் பேருந்துகள் டீசலுக்குப் பதிலாக இயற்கை எரிவாயுவை எரிபொருளாகப் பயன்படுத்தத் தொடங்கின. பிறகு டீசல் வாகனங்கள் நகருக்குள் வரத் தடை விதிக்கப்பட்டது. இப்படி டெல்லியில் உள்ள ஒவ்வொரு உயர் அமைப்பும் டெட்டியைப் போல கேஸ் சிலிண்டருக்குப் பின்னால் ஏதாவதொரு சுண்டெலியைக் கண்டுபிடித்து கவ்வுகின்றன.

அரற்றி எந்த லாபமும் இல்லை. முதலில் நாம் காற்று மாசு பிரச்சினையை ஒப்புக்கொள்ள வேண்டும். பலர் முயன்றும் பிரச்சினையைத் தீர்க்க முடியவில்லை என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும். . டெல்லி மாநகரம் மட்டும் காற்று மாசில் ஆழ்ந்துவிடவில்லை. வட இந்தியா முழுவதும் இது வியாபித்திருக்கிறது என்பதை ஆஆகவின் அதிஷி மர்லேனா சுட்டிக்காட்டியிருக்கிறார்.

முதலில் டெல்லி, பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் கூட்டத்தைப் பிரதமர் கூட்ட வேண்டும். நெல் வயலில் அடிக்கற்றையைப் பற்ற வைக்காமலிருக்க விவசாயிகளுக்குத் தர வேண்டிய இழப்பீட்டைப் பற்றி தீர்மானிக்க வேண்டும். டீசல் மீது போடப்படும் கூடுதல் வரி, நகருக்குள் வரும் லாரிகளுக்கான நுழைவு வரி போன்றவற்றிலிருந்து கிடைக்கும் கோடிக்கணக்கான ரூபாய்களை இதற்குப் பயன்படுத்த வேண்டும்.

டெல்லி நகரின் மாசில் 38% தெருப் புழுதியிலிருந்துதான் வருகிறது என்று ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. புழுதி கிளம்பாமல் சாலைகளைப் பெருக்க வாக்குவம் மெஷின்களைப் பயன்படுத்த வேண்டும். ஹெலிகாப்டரிலிருந்து தண்ணீர் தெளிப்பது, தீயணைப்புப் படையைக் கொண்டு மரங்கள் மீது தண்ணீரைப் பீய்ச்சுவது போன்ற கிறுக்குத்தனமான யோசனைகளைக் கைவிட வேண்டும். பழைய டிடிசி பேருந்துகளைப் பயன்பாட்டிலிருந்து விலக்க வேண்டும். இலவச மின்சாரம், மானியக் கட்டணத்தில் மின்சாரம், இலவசக் குடிநீர் போன்ற நிதி விரயங்களை நிறுத்த வேண்டும். காற்று மாசைக் குறைக்க திட்டமிட்ட, ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் அவசியம்.

தமிழில்: ஜூரி

சேகர் குப்தா, ‘தி பிரின்ட்’ தலைவர்

முதன்மை ஆசிரியர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x