மகாராஷ்டிரா அரசியல் | சரத் பவாரை சந்தித்து ஆசி பெற்ற அஜித் பவார் அணியினர்

அஜித் பவார் - சரத் பவார் | கோப்புப் படம்.
அஜித் பவார் - சரத் பவார் | கோப்புப் படம்.
Updated on
1 min read

மும்பை: இரண்டு வார பூசலுக்குப் பின்னர் மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் அணியினர் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரை சந்தித்து ஆசி பெற்றது அம்மாநில அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜித் பவார் மற்றும் அவரது அணியை சேர்ந்த மூத்த தலைவர் பிரபுல் பட்டேல், ஜிதேந்திரா, ஹசன் முஷ்ரிப் மற்றும் திலீப் வல்சே பாட்டீல் ஆகியோர் சரத் பவாரை இன்று சந்தித்தனர். இது சரத் பவாரை சமாதானப்படுத்தும் முயற்சியாகக் கருதப்படுகிறது.

ஜூலை 2 ஆம் தேதி அஜித் பவார் தனது சகாக்கள் 8 பேருடன் மகாராஷ்டிரா அமைச்சரவைக்கு ஆதரவுளித்து தன்னை அக்கூட்டணியில் இணைத்துக் கொண்டார். எதிர்பாராத அந்த முடிவால் என்சிபியில் பிளவு ஏற்பட்டது.
இந்நிலையில் மும்பை ஒய்.பி. செண்டரில் சரத் பவார் இன்று இருப்பதை அறிந்த அஜித் பவார் தரப்பினர் அவரை சந்தித்தனர். அப்போது பவாரிடம் அவர்கள் ஆசி பெற்றதாகத் தெரிகிறது.

இந்த சந்திப்பு குறித்து பிரபுல் படேல் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நாங்கள் அனைவரும் எங்கள் கடவுள் சரத் பவாரிடம் ஆசி பெறுவதற்காக வந்துள்ளோம். பவார் இங்கே இருப்பதை அறிந்து வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டோம்.

தேசியவாத காங்கிரஸ் கட்சி இணைந்திருக்க வேண்டும் என்பதை பவாரிடம் தெரிவித்தோம். ஆனால் அவர் அதற்கு ஏதும் சொல்லவில்லை."என்றார்.

மகாராஷ்டிராவில் நாளை (ஜூலை 17) மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

அண்மையில் தான் சரத் பவாரின் அதிகாரபூர்வ இல்லமான சில்வர் ஓக் இல்லத்துக்கு அஜித் பவார் சென்றார். அங்கு அவரது அத்தையும் சரத் பவாரின் மனைவியுமான பிரதீபா பவாரை சந்தித்து நலம் விசாரித்தார். கடந்த 2019-ல் அஜித் பவார் கட்சியில் அதிருப்தி காட்டி தேவேந்திர பட்நவிஸுடன் கைகோத்தபோது பிரதீபா தான் அவரை மீண்டும் என்சிபி-க்குள் ஐக்கியமாக்கினார். இந்நிலையில் இப்போது அத்தை பிரதீபாவை அஜித் பவார் சந்தித்தது, அதன் பின்னர் அஜித் பவார் தலைமையிலான அணியினர் சரத் பவாரை சந்தித்தது கவனம் பெற்றுள்ளது.

முன்னதாக இன்று அஜித் பவார் தனது ஆதரவு எம் எல் ஏ.,க்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது அவர், "நாம் இன்று ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்றுள்ளோம். அதற்காக சரத் பவாருடன் இருக்கும் என்சிபி எம்எல்ஏ.,க்களை விமர்சிக்கக் கூடாது. அவர்களுடன் நாம் நீண்ட காலம் பணியாற்றி இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்வோம்" என்று அறிவுறுத்தியாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in