

ரம்ஜான் நோன்பு இருந்த ஒருவரை சிவசேனை கட்சி எம்.பி.க்கள் வற்புறுத்தி சாப்பிட வைத்தது தவறு என பாஜக மூத்த தலைவர் அத்வானி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள மகாராஷ்டிர மாநில இல்லத்தில் ஐ.ஆர்.சி.டி.சி. உணவு வழங்கும் பணியினை மேற்கொண்டு வருகிறது. கடந்த வாரம் மகாராஷ்டிரா சதானுக்கு வந்த சிவசேனை எம்.பி.,க்கள் 11 பேர், தங்களுக்கு சாப்பிட மகாராஷ்டிர மாநில பாரம்பரிய உணவு வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
ஆனால் பணியில் இருந்த ஊழியர்கள் அவர்களுக்கு சப்பாத்தியை பரிமாறியுள்ளனர். இதனால் சிவசேனை கட்சி எம்.பி.க்கள் கோபத்தில் மேற்பார்வையாளரை வலுக்கட்டாயமாக சப்பாத்தியை சாப்பிட வைத்துள்ளனர் என்று கூறப்படுகிறது. அந்த மேற்பார்வையாளர் ஒரு முஸ்லிம். அவர் ரம்ஜான் நோன்பு மேற்கொண்டிருந்தார் என கூறப்படுகிறது.
ரம்ஜான் நோன்பு இருந்த முஸ்லிம் ஒருவரை வற்புறுத்தி சாப்பிட வைத்ததாக சிவசேனை கட்சி எம்.பி.,க்கள் மீதான புகார் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து பாஜக மூத்த தலைவர் அத்வானியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் 'இது தவறு, ஏற்றுக்கொள்ள முடியாத செய்கை' என தனது கண்டனத்தை பதிவு செய்தார்.