

இந்திய எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவல் முறியடிக்கப்பட்டுள்ளது. ராணுவ தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இது குறித்து கர்ணல் முனிஷ் மேஹ்தா கூறியதாவது: "ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைப் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றனர். இன்று அதிகாலை எல்லைப் பகுதியில் ரோந்து மேற்கொண்ட ராணுவத்தினர் இதனை கண்டுபிடித்தனர்.
இதனைத் தொடர்ந்து, பயங்கர ஆயுதங்களுடன் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளுடன் ராணுவத்தினர் கடும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை, 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தொடர்ந்து சண்டை நீடித்து வருகிறது" என்றார்.
உச்சகட்ட பாதுகாப்பு:
பிரதமர் நரேந்திர மோடி நாளை (வெள்ளிக்கிழமை) ஜம்மு செல்கிறார். உரி மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நீர்மின் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். பிரதமர் வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சி செய்துள்ளனர்.
24 மணி நேரத்தில் 2வது ஊடுருவல்:
பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு வரவுள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் நடந்துள்ள இரண்டாவது ஊடுருவல் இது என தெரிகிறது. நேற்றிரவும் இப்பகுதியில் ஊடுருவல் முயற்சி நடந்துள்ளது.
ஜூலை 1 நள்ளிரவில் மேந்தார் எல்லை வழியாக ஊடுருவ முயற்சி நடந்தது.