

டெல்லியில் மீண்டும் தேர்தல் நடத்த வலியுறுத்தி டெல்லி துணை நிலை ஆளுநரை ஆம் ஆத்மி கட்சித் தலைவர் தலைமையிலான எம்.எல்.ஏ.க்கள் சந்தித்தனர்.
டெல்லி துணை நிலை ஆளுநரை சந்தித்த ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான 27 எம்.எல்.ஏ.க்கள், டெல்லியில் மீண்டும் தேர்தல் நடத்துமாறு வலியுறுத்தினர்.
டெல்லி சட்டசபையை கலைக்க காலம் தாழ்த்துவது அங்கு ஆட்சி அமைப்பதில் குதிரை பேரத்தை ஊக்குவிக்கும் என துணை நிலை ஆளுநரிடம் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆளுநருடனான சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-வும் டெல்லி முன்னாள் சட்ட அமைச்சருமான சோம்நாத் பார்தி கூறுகையில்: "டெல்லி அரசியல் நிலவரம் குறித்து எடுத்துரைத்தோம். டெல்லியில் ஆட்சி நடத்த குதிரை பேரம் நடந்து வருகிறது. அவ்வாறு குதிரை பேரம் நடத்துபவர்கள் ஆட்சி அமைத்தால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது என்பதையும் எடுத்துரைத்தோம்" என்றார்.
சந்திப்பு தொடர்பாக கேஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், "துணை நிலை ஆளுநருடனான சந்திப்பு ஆக்கப்பூர்வமாக இருந்தது. இனி, பாஜகவினரை அழைத்து துணை நிலை ஆளுநர் ஆலோசனை நடத்துவார். பாஜக ஆட்சி அமைக்கக் கோரினால் அதற்கான எண்ணிக்கை பலத்தை அவர்கள் காட்ட வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.