‘சந்திரயான்-3’ நிலவை நோக்கிய பயணத்தைத் தொடங்கிவிட்டது: இஸ்ரோ தலைவர்

இஸ்ரோ தலைவர் சோமநாத்
இஸ்ரோ தலைவர் சோமநாத்
Updated on
1 min read

ஸ்ரீஹரிகோட்டா: சந்திரயான்-3 நிலவை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கிவிட்டது என்று இஸ்ரோ தலைவர் சோமநாத் தெரிவித்தார். 'மிஷன் அக்கம்ப்ளிஷ்ட்' என்று ஆங்கிலத்தில் அவர் உரையைத் தொடங்கியதும் அரங்கில் கரகோஷம் எழுந்தது.

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் இன்று மதியம் 2.35 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இஸ்ரோ தலைவர் சோமநாத், "திட்டமிட்டபடி விண்கலம் பூமியில் இருந்து 179 கிலோ மீட்டர் தொலைவில் அதன் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. சந்திரயான்-3 நிலவை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கிவிட்டது. இனி எல்லாம் சரியாக நடைபெற வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய சந்திரயான்-3 திட்ட இயக்குநர் மோகன் குமார், "சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதன் மூலம் மீண்டும் அது மிகவும் வலுவான ஒரு விண்கலம் என்பதை உலகுக்கு நிரூபித்துள்ளது" என்று பெருமிதம் தெரிவித்தார். தொடர்ந்து இந்தத் திட்டத்தில் பணியாற்றிய அனைவருக்கும் தனது வாழ்த்துகளையும் நன்றியையும் அவர் பதிவு செய்தார்.

மத்திய அமைச்சர் பாராட்டு: விண்வெளித் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் பேசுகையில், "இது நிச்சயமாக இந்தியாவின் ஒரு மகத்தான தருணம். ஓர் இலக்கை நோக்கிய வரலாற்றுப் பயணத்தின் தொடக்கம். இந்தியாவை பெருமிதம் கொள்ளச் செய்த இஸ்ரோவுக்கு நன்றி. 60 ஆண்டுகளுக்கு முன்னர் விக்ரம் சாராபாய் கண்ட கனவை நினைவாக்கியுள்ள நாள். இந்தியாவின் தற்சார்பு நிலையை நிரூபித்துள்ளோம்" என்று தெரிவித்தார். | வாசிக்க > வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது சந்திரயான்-3

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in