Published : 14 Jul 2023 04:21 PM
Last Updated : 14 Jul 2023 04:21 PM
புதுடெல்லி: மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கை குறித்த மனு தொடர்பாக அம்மாநில சபாநாயகர் ராகுல் நார்வேகருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தகுதி நீக்கம் தொடர்பாக முடிவு எடுக்க தாமதப்படுத்துவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீது இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம் சிவசேனா தலைமைக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட அக்கட்சியின் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் பாஜகவுடன் இணைந்து புதிய கூட்டணி அரசை உருவாக்கி அதன் முதல்வரானார். இதனைத் தொடர்ந்து ஒருங்கிணைந்த சிவசேனாவின் சட்டப்பேரவைக் கொறடாவாக இருந்த சுனில் பிரபு (தற்போது உத்தவ் தாக்கரே சிவசேனா அணி எம்எல்ஏ) கட்சிக் கொறடா என்ற முறையில் ஷிண்டே மற்றும் 15 எம்எல்ஏக்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார். அந்த மனுக்கள் மீது இதுவரை விசாரணை மேற்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில், சுனில் பிரபு இந்த மாதம் தகுதி நீக்க மனுக்களை விரைந்து விசாரிக்க மகாராஷ்டிரா சட்டப்பேரவை சபாநாயகருக்கு உத்தரவிடும்படி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவர் தனது மனுவில், மே மாதம் 11-ம் தேதி உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், தகுதி நீக்க மனுக்கள் மீது சபாநாயகரே உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறிய பின்னரும் நார்வேகர் தாமதப்படுத்துவதாக தெரிவித்திருந்தார்.
இதனிடையே, நீதிமன்ற நோட்டீஸுக்கு பின்னர் சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) மாநிலங்களவை உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி தனது ட்விட்டர் பதிவொன்றில், "துரோக கும்பலுக்கு நேரம் நெருங்கி விட்டது" என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில், மகாராஷ்டிரா சபாநாயகர் ராகுல் நார்வேகர் கடந்த வெள்ளிக்கிழமை, தற்போது தான் சிவ சேனாவின் சட்டவிதிகளின் நகல் தலைமைத் தேர்தல் ஆணையத்திடமிருந்து கிடைத்துள்ளது. தகுதி நீக்க மனுக்கள் மீதான நடவடிக்கை விரைவில் தொடங்கும் என்று தெரிவித்திருந்தார்.
சபாநாயகரே முடிவெடுக்கலாம்: முன்னதாக, சிவசேனா பிளவு தொடர்பான வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் 5 பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு மே 11-ம் தேதி வழங்கிய தீர்ப்பில், "உட்கட்சி பூசல் காரணமாக ஏற்பட்ட கிளர்ச்சியைத் தொடர்ந்து உத்தவ் தாக்கரே பெரும்பான்மையை இழந்து விட்டார் என சபாநாயகர் முடிவு செய்ததில் தவறு செய்துவிட்டார்.
பெரும்பான்மையை நிரூபிக்க சபாநாயகர் அழைப்பு விடுத்ததற்கு எந்த விதமான காரணங்களும் இல்லை. உள்கட்சி, கட்சிகளுக்கு இடையில் ஏற்படும் பூசல்களைத் தீர்ப்பதற்கும், நிவர்த்தி செய்வதற்கும் அவையில் பெரும்பான்மையை நிரூபிப்பது மட்டுமே தீர்வாகாது. துணை முதல்வர் தேவிந்திர பட்நாவிஸ் மற்றும் சுயேட்சை எம்எல்ஏக்கள் யாரும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவில்லை. ஆளுநரின் விருப்பத்துக்கு ஏற்ப எடுத்த நடவடிக்கை சட்டபூர்வாமனது இல்லை.
ஏக்நாத் ஷிண்டே அணியின் புதிய கொறடாவாக பாரத் கோகவாலேவை நியமித்தது சட்டவிரோதமானது. விசாரணைக்கு பின்னர் சபாநாயகர் புதிய கொறடாவை நியமிக்க வேண்டும். எது உண்மையான சிவசேனா கட்சி என்பதை சபாநாயகரே தீர்மானிக்கலாம்ல் அதிருப்தியாளர்கள் மீதான தகுதி நீக்க மனுக்களையும் சபாநாயகரே முடிவுசெய்யவேண்டும்" என்று தெரிவித்திருந்தது.
வழக்கு பின்னணி: கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 28-ம் தேதி மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இணைந்து கூட்டணி அரசை அமைத்தன. சுமார் இரண்டரை ஆண்டு கால ஆட்சிக்குப் பிறகு சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே, அன்றைய முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார்.
இதைத் தொடர்ந்து கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 16 அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சட்டப்பேரவையின் அன்றைய துணை சபாநாயகர் நரஹரி ஜிர்வால் நோட்டீஸ் அனுப்பினார். இதனிடையே ஷிண்டே தரப்பில் துணை சபாநாயகர் நரஹரி ஜிர்வாலுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டது. பல்வேறு திருப்பங்களுக்குப் பிறகு மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே அரசு கவிழ்ந்து, கடந்த 2022 ஜூன் 30-ம் தேதி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பாஜக கூட்டணி அரசு பதவியேற்றது.
என்சிபி திருப்பம்: இந்தச் சூழ்நிலையில், மகாராஷ்டிராவில் மற்றொரு அரசியல் திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் அக்கட்சியின் தலைமைக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் சிவ சேனா (ஷிண்டே அணி) - பாஜக கூட்டணி அரசில் இணைந்து துணை முதல்வரானார். மகாராஷ்டிரா அமைச்சரவையில் அஜித் பவார் இணைந்திருக்கும் நிலையில், மாநில அரசில் இருந்து ஏக்நாத் ஷிண்டே வெளியேற்றப்படலாம் என்று செய்திகள் பரவத் தொடங்கியன. ஆனால் இதனை மறுத்துள்ள முதல்வர் ஷிண்டே அவை வதந்திகள் என்றும் ஆளும் கூட்டணி அரசு முன்பை விட மிகவும் வலுவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT