25 சமோசா ஆர்டர் செய்து ரூ.1.40 லட்சம் இழந்த மருத்துவர்

25 சமோசா ஆர்டர் செய்து ரூ.1.40 லட்சம் இழந்த மருத்துவர்
Updated on
1 min read

மும்பை: மும்பையில் 27 வயது மருத்துவர் நண்பர்களுடன் கடந்த வாரம் சுற்றுலா செல்வதற்கு முன்னர் அனைவருக்கும் சமோசா வாங்க நினைத்தார். சியான் பகுதியில் உள்ள பிரபல குருகிருபா ஓட்டலுக்கு மருத்துவர் போன் செய்து 25 சமோசா ஆர்டர் செய்தார்.

எதிர்முனையில் பேசியவர், சமோசாவுக்கு ரூ.1,500 என்று கூறி, அதற்கான லிங்கை மருத்துவரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பியுள்ளார். மருத்துவரும் அந்த லிங்கில் பணம் அனுப்பினார். ஆனால், ஓட்டல் சார்பில் பேசியவர், “எங்கள் கணக்கில் பணம் வரவில்லை. நான் இப்போது உங்கள் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரு ஓடிபி அனுப்புகிறேன். அதை நான் அனுப்பும் லிங்கில் டைப் செய்யுங்கள்” என்று கூறியுள்ளார். மருத்துவரும் அதன்படி செய்துள்ளார். மறுநிமிடமே மருத்துவரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.28,000 பணம் எடுக்கப்பட்டது. சில நிமிடங்களில் அவரது வங்கிக் கணக்கில் இருந்து மொத்தம் ரூ.1.40 லட்சம் திருடப்பட்டது.

இதுகுறித்து மருத்துவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சைபர் மோசடி குழுவினர், கூகுளில் குருகிருபா ஓட்டலின் தொலைபேசி நம்பரை மாற்றி தங்கள் நம்பரை பதிவிட்டுள்ளனர். இதனால், கூகுள் மூலம் அந்த ஓட்டல் தொடர்பு எண்ணை யார் தேடினாலும், அவர்களுக்கு சைபர் மோசடி குழுவின் மொபைல் நம்பர் வந்துள்ளது. இதைப் பயன்படுத்தி அவர்கள் பணம் பறித்தது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அந்த கும்பலை பிடிக்க போலீஸார் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in