

யமுனையில் வரலாறு காணாத வெள்ளம்: டெல்லி மக்கள் பாதிப்பு: டெல்லியில் யமுனை ஆற்றில் வரலாறு காணாத அளவில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. புதன்கிழமை மதிய நிலவரப்படி யமுனை ஆற்றின் வெள்ள நீர்மட்டம் 207.55 மீட்டர் என்றளவில் இருந்தது. இது கடந்த 45 ஆண்டுகளில் இல்லாதததாகும். இதற்கு முன்பு கடந்த 1978-ஆம் ஆண்டில் 207.49 என்றளவில் யமுனையில் வெள்ளம் பாய்ந்துள்ளது.
இந்த வெள்ளப் பெருக்கின் காரணமாக, கரையோர வீடுகள், சந்தைகள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். யமுனை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பலர் தங்கள் வீடுகளின் மொட்டை மாடிகளில் தஞ்சமடைந்துள்ளனர். உடைமைகளுடன் அவர்கள் காத்திருக்கும் காட்சிகள் செய்திகளில் வெளியாகியுள்ளன.
யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள சூழலில், மத்திய அரசு தலையிட்டு தீர்வு காணுமாறு டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார்.
இதனிடையே, வட மாநிலங்களில் கனமழை தொடரும் சூழலில் செவ்வாய்க்கிழமை மட்டும் 20 பேர் உயிரிழந்தனர். இதனால் வடமாநிலங்களில் மழை, வெள்ள பாதிப்புகளால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் மட்டும் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 31 பேர் உயிரிழந்தனர். இதுவரை அங்கு பருவமழைக் காலம் தொடங்கியதிலிருந்து 80 பேர் உயிரிழந்தனர். உத்தராகண்டில் 5 பேர், உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் மாவட்டங்களில் தலா ஒருவர் உயிரிழந்தனர்.
பொது சிவில் சட்டத்துக்கு எதிராக சட்ட ஆணையத்துக்கு திமுக கடிதம்: பொது சிவில் சட்டமே நிறைவேற்றக் கூடாது என்பதுதான் இறுதியான, தீர்க்கமான திமுகவின் கொள்கை பிரகடனம் என்பதை வலியுறுத்தி இந்திய சட்ட ஆணையத்தின் கருத்துக் கேட்பு கடிதத்திற்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பதில் எழுதியுள்ளார். அதில், மதச்சார்பின்மைக்கு குந்தகம் ஏற்படும் என்பதால், பொது சிவில் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வரக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
மகளிர் உரிமைத் தொகை: ஜூலை 20 முதல் விண்ணப்பம்: மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மாதம் ரூ.1000 பெறுவதற்கான விண்ணப்பங்கள் வருகிற 20-ம் தேதி முதல் அனைத்து குடும்ப அடடைதாரர்களுக்கும் ரேஷன் கடை பணியாளர்கள் மூலம் வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் மீது இபிஎஸ் குற்றச்சாட்டு: தன் குடும்பத்தின் மீதும், சக அமைச்சர் மீதும் உள்ள குற்றச்சாட்டுகளை மறைக்கவே, குடியரசு தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர்களை குற்றவாளி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரத்தில் மாற்றம் இல்லை: "நான் திட்டவட்டமாக சொல்கிறேன். டாஸ்மாக் கடைகளின் நேரத்தை மாற்றும் எண்ணமே அரசுக்கு கிடையாது. டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணிக்குத் தொடங்கி இரவு 10 மணிக்கு அடைக்கப்படும். இதில் எந்த மாற்றமும் இல்லை" என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி விளக்கம் அளித்துள்ளார்.
இதனிடையே, டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் வாங்கியதை தட்டிக் கேட்டவரை காவல் துறை அதிகாரி கடுமையாக தாக்கிய சம்பவம், இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு: அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஜூலை 26-ம் தேதி வரை நீட்டித்து சென்னை அமர்வு முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரது நீதிமன்ற காவல் புதன்கிழமை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜி சிகிச்சைப் பெற்று வரும் காவேரி மருத்துவமனையில் இருந்து காணொலி வழியாக ஆஜரானார். இதனைத் தொடர்ந்து நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் கூட்டம்: காங்கிரஸ் தீவிரம்: கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் வரும் 17,18 ஆகிய தேதிகளில் நடக்கும் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டத்தில் 24 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் சோனியா காந்தி கலந்து கொள்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தகூட்டத்தின் போது காங்கிரஸ் விருந்துக்கும் அழைப்பு விடுத்துள்ளது.
மீனவர் பிரச்சினை: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்: இலங்கை கடற்படையினரால் 2014-க்குப் பிறகு தமிழக மீனவர்கள் எவரும் உயிரிழக்கவில்லை என உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
‘16 வயதினிலே’ பட தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு மறைவு: 16 வயதினிலே’, ‘கிழக்கே போகும் ரயில்’ உள்ளிட்ட படங்களை தயாரித்த தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 77. அவரது மறைவுக்கு தமிழ்த் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ள இயக்குநர் பாரதிராஜா, “16 வயதினிலே’ திரைப்படத்தின் வாயிலாக என்னை இயக்குனராக அறிமுகம் செய்து, என் வாழ்வில் ஒளி விளக்கு ஏற்றிச் சென்ற என் முதலாளி S.A.ராஜ்கண்ணு மறைவு, பேரதிர்ச்சியும், வேதனையும், அளிக்கிறது. அவரின் மறைவு எனக்கும் என் குடும்பத்தினருக்கும் பேரிழப்பாகும். ஆழ்ந்த இரங்கல்” என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “ரசிகர்களின் மனதை விட்டு அகலாத பல மகத்தான திரைப்படங்களைத் தமிழுக்குத் தந்த கலையார்வம் மிக்க தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு மறைந்துவிட்டார். என் திரைவாழ்வின் முக்கியமான திரைப்படங்களான 16 வயதினிலே, மகாநதி ஆகிய படங்கள் அவரது தயாரிப்பில் உருவானவை” என்று குறிப்பிட்டுள்ளார்.
தொழில்நுட்ப ஆதாரங்களை வழங்கியது டெல்லி போலீஸ்: பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு புகாரினை எதிர்கொண்டுவரும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சிங், பின்தொடருதல் மற்றும் துன்புறுத்துதல் ஆகிய குற்றங்களுக்காக விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படலாம் என்று டெல்லி போலீசாரின் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக டெல்லி போலீசார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் முன்வைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப ஆதாரங்கள் இதனை உறுதி செய்கின்றன.