Published : 12 Jul 2023 07:02 AM
Last Updated : 12 Jul 2023 07:02 AM
புதுடெல்லி: சவுதி அரேபியாவின் மெக்கா நகரில் இருந்து செயல்படும் ‘முஸ்லிம் உலக லீக்’ என்ற மிதவாத தன்னார்வ அமைப்பின் பொதுச் செயலாளர் ஷேக் முகமது பின் அப்துல் கரீம் அல்-இசா, 6 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
டெல்லியில் உள்ள இந்திய இஸ்லாமிய கலாச்சார மையத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “இந்தியாவின் வரலாறு மற்றும் பன்முகத்தன்மையை நாங்கள் பாராட்டுகிறோம். இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள நாடாக இருந்தபோதிலும் மதச்சார்பற்ற அரசியல் சட்டத்தை இந்தியா கொண்டுள்ளது. பல்வேறு மதங்கள் இடையிலான புரிதலை வலுப்படுத்த நாங்கள் விரும்புகிறோம். கூடி வாழ்தலுக்கு ஒட்டுமொத்த உலகுக்கும் சிறந்த முன்மாதிரியாக இந்தியா உள்ளது. இந்திய குடிமக்களாக இருப்பதில் இங்குள்ள முஸ்லிம்கள் பெருமிதம் கொள்கின்றனர். தங்களது அரசியலமைப்பு சட்டம் குறித்தும் அவர்கள் பெருமிதம் கொள்கின்றனர்” என்றார்.
இந்நிகழ்ச்சியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பேசியதாவது:
இந்தியா தனது அனைத்து குடிமக்களுக்கும் அவர்களின் மத, இன மற்றும் கலாச்சார அடையாளங்களை பொருட்படுத்தாமல் வெற்றிகரமாக இடமளித்துள்ளது.முஸ்லிம் மக்கள் தொகையில் உலகின் 2-வது பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது. இங்குள்ள மதக் குழுக்களிடையே தனித்துவமான மற்றும் குறிப்பிடத்தக்க பெருமைக்கான இடத்தை இஸ்லாம் பெற்றுள்ளது.
இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் 33-க்கும் மேற்பட்ட உறுப்பு நாடுகளின் மொத்த மக்கள் தொகைக்கு சமமாக இந்திய முஸ்லிம் மக்கள்தொகை உள்ளது. பல்வேறு உலக கருத்துகள், சிந்தனைகள், கலாச்சாரங்கள், நம்பிக்கைகளை இந்தியா ஏற்றுக்கொள்கிறது. உலகம் முழுவதும் பல்வேறு நம்பிக்கை கொண்ட துன்புறுத்தப்பட்ட மக்களுக்கு ஒரு சரணாலயமாக இந்தியா உருவாகியுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT